படக்குறிப்பு, வெடிப்பு சத்தத்தை கேட்டதும் மூன்று முறை விழுந்ததாக வலி உர் ரஹ்மான் கூறினார்.
திங்கள் கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஒரு காரில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் எட்டு பேர் இறந்ததை டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் திகைத்துப் போனதாக தெரிவித்தனர்.
வெடிப்பு தனது வீட்டின் ஜன்னல்களை அசைத்ததாக ஒரு வயதான நபர் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு கடை உரிமையாளர், வெடிச்சத்தத்தைக் கேட்ட பிறகு மூன்று முறை விழுந்ததாகவும், பின்னர் அமைதியடைந்ததாகவும் கூறினார்.
காயமடைந்தவர்களில் சிலர் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் பிபிசி நியூஸ் இந்தியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
நேரில் கண்ட சாட்சி கூறியது என்ன?
சம்பவத்தை நேரில் பார்த்த விரு சிந்தி, பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசினார். விபத்துக்குப் பிறகு பலர் காயமடைந்ததைக் கண்டதாக அவர் கூறினார்.
“சிவப்பு சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தபோது திடீரென பலத்த வெடிப்பு ஏற்பட்டது. ஆறு முதல் ஏழு வாகனங்கள் தீப்பிடித்தன. காயமடைந்தவர்கள் சில வாகனங்களில் இருந்து இறங்கி ஓடினர். டெல்லி காவல்துறையினருடன் சேர்ந்து, காயமடைந்தவர்களை வாகனங்களில் இருந்து மீட்டேன்” என்று அவர் கூறினார்.
இந்த வெடிப்பில் அருகிலுள்ள தற்காலிக காவல் முகாமும் சேதமடைந்ததாக நேரில் பார்த்த விரு சிந்தி தெரிவித்தார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, சம்பவ இடத்தின் அருகே வசிக்கும் ராஜ்தர் பாண்டே தனது வீட்டின் ஜன்னல் அதிர்ந்ததாகக் கூறினார்
“மூன்று முறை விழுந்தேன்”
அப்பகுதியில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே பேசுகையில், “நாங்கள் தீப்பிழம்புகளைப் பார்த்தோம். நான் என் வீட்டின் மேல் தளத்திலிருந்து பார்த்தேன். பின்னர் என்ன நடக்கிறது என்று பார்க்க கீழே வந்தேன். மிகவும் பலத்த சத்தம் கேட்டது. கட்டடத்தின் ஜன்னல் அதிர்ந்தது.” என்றார்.
வாலி உர் ரஹ்மான் என்ற உள்ளூர் கடைக்காரர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “வெடிப்பு நிகழ்ந்தபோது நான் என் கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென்று, நான் இதுவரை அறிந்திராத அளவுக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. வெடிச்சத்தத்தைக் கேட்டதும், மூன்று முறை விழுந்தேன். அதன் பிறகு, அருகிலுள்ள அனைவரும் ஓட ஆரம்பித்தனர். நானும் கடையை விட்டு வெளியேறி ஓடினேன்” என்று கூறினார்.
வெடிப்புக்குப் பிறகு சம்பவ இடத்தை அடைந்தபோது, காயமடைந்தவர்கள் பலரையும் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிவதையும் கண்டதாக முகமது அசாத் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறினார்.
சீஷான் என்ற ஆட்டோ ஓட்டுநர், வெடிப்பு ஏற்பட்டபோது, தனக்கு முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்ததாகவும், தனக்கு சில அடி தூரத்தில், வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.