டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025
இந்தச் செய்தியைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் ஒரு நவீன உலாவி மற்றும் நிலையான இணைய இணைப்பு தேவை.
டெல்லியில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தேர்தல் வெற்றிக்காகக் காத்திருந்த பாரதிய ஜனதா கட்சி, இறுதியாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்மூலம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
டெல்லி தேர்தலில் கடைசியாக பாஜக 1993ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. கடந்த சில தேர்தல்களில், பிரதமர் மோதியை முன்னிறுத்தி பாஜக போட்டியிட்டபோதும், வெற்றியைத் தவறவிட்டது.
இதற்கிடையில், மாநில அளவில் பலமுறை தனது தலைமையை பாஜக மாற்றிய போதும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இந்த முறையும், பாஜக முதலமைச்சர் முகமாக யாரையும் முன்னிறுத்தவில்லை. பிரதமர் மோதியை மட்டுமே முன்னிறுத்தி தனது வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த முறை பாஜகவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த 4 காரணங்களை இங்கு பார்ப்போம்.
மத்திய பட்ஜெட்டின் தாக்கம்
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியிருக்காது என்று அறிவித்தார்.
பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியானது. இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளர் ரவீந்தர் பாவா இதுகுறித்துப் பேசிய போது, “இரட்டை என்ஜின் அரசாங்கம் என்ற அணுகுமுறை மக்கள் மனதில் பதிந்துள்ளதைப் போலத் தெரிகிறது. இரண்டாவதாக, கடைசி நிமிடத்தில் கையில் எடுக்கப்பட்ட பட்ஜெட் நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக இருந்திருக்கலாம். அது ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
ஜனவரி மாத தொடக்கத்தில், எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு முதல் மாநில அரசு வரை தொடர்புடைய ஏராளமான ஊழியர்கள் டெல்லியில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு பாஜகவுக்கு ஒரு பெரிய தேர்தல் நன்மையைக் கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிரான அலை
கடந்த 11 ஆண்டுகளாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், ஆம் ஆத்மி அரசு டெல்லி மக்களுக்காக, இலவச மின்சாரம், தண்ணீர், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டது.
அப்படியிருந்தும், இந்த முறை ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை டெல்லி மக்கள் விரும்பாதது ஏன்?
இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளார் பிரமோத் ஜோஷி, “டெல்லியின் வளங்களின் உதவியுடன், ஆம் ஆத்மி அரசு பல விஷயங்களை இலவசமாக வழங்கியது. இது குடிசைவாசிகள் மற்றும் ஏழைகளை ஈர்த்தது. ஆனால், இந்த நேரத்தில் டெல்லி போன்ற ஒரு நகரத்தின் உள்கட்டமைப்பில் நடக்க வேண்டிய வளர்ச்சி நடக்கவில்லை என்று நடுத்தர வர்க்கத்தினர் உணர்ந்திருக்கலாம். இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது நாட்டின் தலைநகருக்கும் அதில் வாழும் மக்களுக்கும் மிக முக்கியமானது,” என்று கூறினார்.
“அடிப்படையில் டெல்லியில் உள் கட்டமைப்பு இன்னும் ஷீலா தீட்சித் விட்டுச் சென்றதைப் போலவே உள்ளது. 2010இல் காமன்வெல்த் விளையாட்டுக்காகச் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாலைகள், மேம்பாலங்கள் போன்ற ஷீலா தீட்சித் ஆட்சியில் செய்யப்பட்ட பிற வளர்ச்சிப் பணிகளே இருக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியதும் இந்த முறை பாஜகவுக்கு மற்றொரு நன்மையைக் கொடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றிய பிறகும், மாநகராட்சி தொடர்பான பிரச்னைகள் குறையவில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். மாநிலத்திலும், மாநகராட்சியிலும் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த போதிலும், தலைநகரில் தூய்மை, சாலை மற்றும் நீர் தொடர்பான பல பிரச்னைகள் தொடர்ந்தன. இதற்கு ஆம் ஆத்மி கட்சியே காரணம் என்று மக்கள் கருதினர்.
ஊழல் குற்றச்சாட்டுகள்
ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, மதுபான ஊழலில் ஈடுபட்டதாக அக்கட்சியின் பெரிய தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்றும் கருதப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளர் ரூப் ஸ்ரீ நந்தா கூறுகையில், “தூய்மையான, வெளிப்படையான அரசியலைச் செய்வோம் என்ற வாக்குறுதியுடன் ஆம் ஆத்மியும் கேஜ்ரிவாலும் தொடங்கிய நிலையில், அது ஒரு வகையில் தற்போது முடிவு வந்துவிட்டது,” என்றார்.
மேலும், “இந்திய ஜனநாயகத்திற்கும் அரசியலுக்கும் இன்று மிக முக்கியமான நாள் என்று நினைக்கிறேன். ஏனெனில், அவர் அளித்த நம்பிக்கை இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆம் ஆத்மியின் பல உயர்மட்ட தலைவர்கள் தோல்வியடைந்தது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்ட முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மட்டுமின்றி, டெல்லி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
“ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாக இருக்கலாம். ஆனால், இது மக்கள் மத்தியில் அவர்களின் பிம்பத்தைக் கெடுத்துவிட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்வதில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது,” என்றும் கூறுகிறார் அவர்.
இது தவிர, பாஜக ‘கண்ணாடி மாளிகை’ என்று அழைக்கும் கேஜ்ரிவாலின் அரசு இல்லம், அவர்களும் வசதியான வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டதாக மக்களை உணர வைத்ததாக அவர் கூறுகிறார். “இது கேஜ்ரிவாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது.”
அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது தனது அரசு இல்லத்தில் செய்த மாற்றங்களை பாஜக பெரிய தேர்தல் பிரச்னையாக மாற்றியது. பிரதமர் முதல் அமித் ஷா வரை அனைவரும் தேர்தல் பிரசாரத்தின்போது அந்தப் பிரச்னையை எழுப்பினர்.
பாஜக வெற்றியில் காங்கிரஸின் பங்கு
டெல்லியில் கடந்த 1993ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதன் பிறகு, மாநிலத்தின் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, கட்சியை அடிமட்ட அளவில் ஒழுங்கமைத்து வைத்திருப்பது கட்சிக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா இதுகுறித்துப் பேசுகையில், “ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக இரட்டை இன்ஜின் அரசாங்கத்தைப் பற்றிப் பேசியபடி மக்களிடம் செல்கிறது. இது பாஜகவின் நுட்பமான அணுகுமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு,” என்றார்.
மற்ற கட்சிகளில் இருந்து வந்த தலைவர்களையும் பாஜக திறமையாகப் பயன்படுத்தியது. இதுபோன்ற பல தலைவர்களுக்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளித்தது. அவர்களும் வெற்றி பெற்றனர்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவராக இருந்து, கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த தர்விந்தர் சிங் மார்வாவின் பெயர் முக்கியமானது. பாஜக அவருக்கு வாய்ப்பளித்தது. மார்வா முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஜங்புரா தொகுதியில் தோற்கடித்தார்.
இதேபோல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி காந்தி நகரில் இருந்தும், ராஜ்குமார் சௌகான் மங்கோல்புரியில் இருந்தும் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளைக் குறைத்தது. இது பாஜகவுக்கு உதவியதாகப் பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2020 தேர்தலில் ஐந்து சதவீத வாக்குகளைக்கூட பெறாத காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் சுமார் 7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தற்போதைய தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசுகையில், இதுவரை உள்ள தரவுகளின்படி, ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
காங்கிரசின் நோக்கம் தன்னை மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்வதே எனத் தான் கருதுவதாகத் தெரிவித்த ரவீந்தர் பாவா, “ஆனால், சந்தீப் தீட்சித் உள்ளிட்ட பிற முகங்களை காங்கிரஸ் களமிறக்கிய விதம், பழிவாங்கும் அரசியலைச் செய்ய வந்ததைப் போலத் தோற்றமளித்தது. ஒரு வகையில், அக்கட்சி தனது வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முயன்றது,” என்றும் கூறினார்.
இதன் அடிப்படையில் பார்த்தால், பாஜகவின் வெற்றியில் காங்கிரஸின் மேம்பட்ட செயல் திறன் ஒரு சிறு பங்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் தனது எக்ஸ் பதிவில், ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான மோதலில் இருந்து பாஜக பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு