இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று குறித்து பிபிசி ஐ நடத்திய புலனாய்வுக்குப் பிறகு, இந்திய அரசு டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் ஆகிய மருந்துகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏவியோ ஃபார்மசூட்டிகல் என்று அழைக்கப்படும் மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிறுவனம் முறையான உரிமம் இன்றி போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளை தயாரித்து வருகிறது என்று பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது.
இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக குறிப்பிட வேண்டும் என்றால் இந்த மருந்துகள் ஓபியாடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளான இவை போதைக்கு அடிமையாக்கும் தன்மைகளை கொண்டவை.
இந்திய அரசு கூறியது என்ன?
பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்ட பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநரகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில், “சமீபத்தில் டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களை உள்ளடக்கிய மருந்துகள் போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அதை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
போதைப் பொருட்களின் சாத்தியப் பயன்பாடு மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களைச் சேர்த்த மருந்துகளைத் தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் வழங்கப்பட்ட தடையில்லா சான்று அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது. இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசின் மருந்து கண்காணிப்பாளர்கள் ஏவியோ நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் மருந்து கிடங்கு ஆகியவற்றில் ஆய்வு நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்கே உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. மருந்து உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?
மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், “ட்ரமடோல், டேபெண்டடால், காரிஸோப்ரோடால் போன்ற மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நைஜீரியா, கானா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கே அந்த மருந்துகள் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது,” என்று பிபிசி பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“அந்த செய்திக்காக மகாராஷ்டிரா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஏவியோ நிறுவனத்திற்குள் சென்று பிபிசி புலனாய்வு மேற்கொண்டது. அந்த நிறுவனம் டேபெண்டடால் மருந்துகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது அப்போது தெரிய வந்துள்ளது.”
“பிபிசி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை மேற்கொண்டு உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கே உற்பத்தி செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மேலும், உற்பத்தி உடனடியாக முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது.”
பட மூலாதாரம், Government of India
”மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1950இன் கீழ் விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எந்த பாரபட்சமும் இன்றி நேர்மையாக இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், “2025ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதியன்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் டேபெண்டடால், காரிஸோப்ரோடால் மற்றும் அதுபோன்ற மருந்துகளை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் வழங்கப்பட்ட தடையில்லா சான்றுகளை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம், நெறிமுறைகளின் கீழ் ஏற்கெனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது” என்கிறது அந்த அறிக்கை.
“இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் புகழுக்குத் தீங்கு விளைவிப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா அரசு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கியுள்ளது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி புலன் விசாரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன?
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஏவியோ பார்மசூட்டிக்கல்ஸ் பல்வேறு பெயர்களில் பலதரப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. அது மட்டுமின்றி அந்த நிறுவனம் அந்த மாத்திரைகளை, சட்டத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்படும் மாத்திரைகளைப் போன்றே ‘ஃபேக்’ செய்கிறது.
ஆனால் அவை அனைத்திலும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவுக்கும் சக்தி வாய்ந்த ஓபியாடுகளான டேபெண்டடால் மற்றும் தசை தளர்த்தியான காரிஸோப்ரோடால் இடம் பெற்றுள்ளன.
காரிஸோப்ரோடால் மருந்து மிகவும் ஆபத்தானது என்பதால் அவை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் கலவையைப் பயன்படுத்த உலகில் எங்கும் உரிமம் இல்லை. இதைப் பயன்படுத்துவது சுவாசக் கோளாறு, வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதிகமாக பயன்படுத்தும்போது உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
இத்தனை அபாயங்கள் இருந்தாலும்கூட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஓபியாடுகள் போதைப் பொருட்களாக பிரபலம் அடைந்துள்ளன. அவை மிகவும் எளிதில், மலிவு விலையில் கிடைப்பதுதான் அதற்குக் காரணம்.
கானா, கோட் டிவோயர் மற்றும் நைஜீரியாவின் தெருக்களில் ஏவியோ முத்திரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை பிபிசி உலக சேவை கண்டுபிடித்தது.
இந்த போதைப் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள பிபிசி ரகசியமாக ஒருவரை உளவு பார்க்க ஏவியோவின் தொழிற்சாலைக்குள் அனுப்பியது.
உள்ளே சென்ற அவர், தன்னை ஒரு ஆப்பிரிக்க தொழிலதிபராக அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும் நைஜீரியாவுக்கு ஓபியாடுகளை அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ரகசிய கேமராவில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா, பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவில் பார்த்த அதே தீங்கு விளைவிக்கும் மருந்துகள் குறித்து விளக்கம் அளிப்பதை பிபிசி பதிவு செய்தது.
மறைமுகமாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் “இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கும் இந்த மாத்திரைகளை” விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.
அதற்கு ஷர்மா வெறுமனே “சரி” என்று மட்டும் தெரிவிக்கிறார். மேலும் இந்த மாத்திரைகளில் இரண்டு அல்லது மூன்றை எடுத்துக் கொண்டால் எவ்வாறு “ஓய்வாகவும்”, (போதையின்) உச்சநிலையையும் உணரலாம் என்பதையும் விளக்கினார்.
அந்தச் சந்திப்பின் முடிவில் ஷர்மா, “இந்த மருந்துகள் அவர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடானது. ஆனால் இதுவொரு தொழில்,” என்று கூறினார்.
இதே தொழில்தான் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கி, அவர்களின் திறனை அழிக்கிறது.
பிபிசி ஐ இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வினோத் ஷர்மா மற்றும் ஏவியோ பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் அதற்குப் பதில் ஏதும் அளிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு