0
டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் இதுவரை இல்லாத அளவு 1.78 மில்லியன் பவுண்ட் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிகாரத்திற்குச் சொந்தக்காரரான இசிடோர் ஸ்ட்ராஸ் (Isidor Straus), டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
1912ஆம் ஆண்டு கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்கியபோது, அவரும் அவரது மனைவி இடாவும் (Ida) உயிரிழந்தனர்.
அந்த அசம்பாவிதம் நடந்து சில நாள்களுக்குப் பின்னர் அவரது உடலும் சில பொருள்களும் மீட்கப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டது.
அவற்றுள் ஒன்றுதான் அந்த 18 கேரட் தங்க பாக்கெட் கடிகாரம். கப்பல் மூழ்கியபோது, கணவரைப் பிரிய மறுத்த இடா, உயிர்காப்புப் படகில் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கணவர் பக்கத்தில் உயிர்பிரிய விரும்பியதாக நம்பப்படுகிறது.
அவரது உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று BBC தெரிவித்தது. அவர் டைட்டானிக் கப்பலில் எழுதிய ஒரு கடிதமும் ஏலத்தில் 100,000 பவுண்ட்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.