மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர்.
எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்யேகமாக ஒரு அதிகாரியை நியமிப்பதாக கனடா தெரிவித்திருந்தது. டிரம்ப் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் 10 ஆயிரம் துருப்புகளை நிறுத்துவதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், பிரிட்டனுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை ஏன் நிறுத்தி வைத்தார்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அது குறித்து சிஎன்என் ஊடக செய்தியாளர் கேட்டபோது, அந்த உரையாடல் ” மிகவும் நன்றாக” இருந்தது என்று டிரம்ப் கூறினார்.
“நமது வட எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கனடா தெரிவித்துள்ளது” என்று தனது சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோசியலில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
எல்லைப் பாதுகாப்புக்காக 130 கோடி கனடிய டாலர்களை செலவிடவுள்ளதாக கூறிய கனட பிரதமரின் ட்வீட்டை குறிப்பிட்டு டிரம்ப் இதனை பதிவிட்டிருந்தார். மேலும், போதைப் பொருள் விற்பனை தடையை கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாகவும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை “பயங்கரவாதிகள்” என்று அங்கீகரிப்பதாகவும் ட்ரூடோ தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
“முதல்கட்ட முடிவுகள் திருப்திகரமாக உள்ளதால், வரி விதிப்பு நடவடிக்கை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது, இந்தக் காலக்கட்டத்தில் கனடாவுடன் ஒரு பொருளாதார ஒப்பந்தம் முடிவு செய்ய முயற்சி எடுக்கப்படும்” என்றும் டிரம்ப் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“அனைவருக்கும் நீதி” என்று தனது பதிவின் இறுதியில் கூறியிருந்தார் டிரம்ப்.
எல்லைப் பாதுகாப்புக்கு 1.3 பில்லியன் டாலர் செலவு செய்ய கனடா முடிவு
வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து வேலை செய்யும் என்பதை கனட பிரதமரும் முன்னதாக தெரிவித்திருந்தார். “எல்லைப் பாதுகாப்புக்காக செலவிடப்படும் 130 கோடி டாலர் பணம் புதிய ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கவும், துருப்புகளை எல்லையில் நிறுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் செலவிடப்படும். ஃபெண்டனில் (போதைப் பொருள்) கடத்தல் நிறுத்தப்படும். அதை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். கனடா-அமெரிக்கா கூட்டுப் படை, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், பண மோசடி, ஃபெண்டனில் கடத்தல் ஆகியவற்றை கண்காணிக்க உருவாக்கப்படும். அந்த படை 24 மணிநேரமும் நிலைமைகளை கண்காணிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வரி விதிப்பை நிறுத்தி வைத்த பிறகு, கனடா அரசியல்வாதிகளும் தொழிலபதிகர்களும் பெருமூச்சுவிடுகின்றனர்.
எல்லையை கண்காணிக்க ட்ரோன்களை கனடா செலுத்தப் போவதாக, டொராண்டாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜெசிக்கா மர்ஃபி கூறுகிறார். வரி விதிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அது எப்போது வேண்டுமானாலும் விதிக்கப்படலாம் என்று அச்சம் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், இந்த நிறுத்தி வைப்பை ட்ரூடோ மற்றும் டிரம்ப் அரசியல் வெற்றியாக காண்பிக்கிறார்கள் என்று ஜெசிக்கா தெரிவிக்கிறார். எல்லையில் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக, டிரம்ப் கூறுவார், அதே நேரம் வரி விதிப்பை தடுத்து நிறுத்தியதாக ட்ரூடோ கூறுவார்.
கனடா அமெரிக்க உறவுகள் குறித்த கனட பிரதமரின் கவுன்சிலின் உறுப்பினரான லானா பெய்னே, “இது கனடாவுக்கு ஒரு திருப்புமுனை” என்று குறிப்பிடுகிறார். அவர் கனடாவின் பெரிய தனியார் துறை சங்கமான யுனிஃபோரின் தலைவராவார்.
“இப்போது திரும்பி செல்வது குறித்த கேள்விக்கு இடமே இல்லை. முப்பது நாள் வரி விதிப்பு நிறுத்தி வைப்புக்குப் பிறகு, ஒருவரும் நம் மீது கை வைக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்திருந்தார்.
“இந்த 30 நாட்களை ஒரு வர்த்தகப் போருக்கு தயாராக கனடா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வலுவான, மீண்டெழும் சக்தி கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க இந்த காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
தொழில் துறையினருக்கு ஏற்படும் சிக்கல் என்ன?
இந்த வரி விதிப்பு நிறுத்தி வைப்பு தொழிலதிபர்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கியிருப்பதாக, பிபிசி செய்தியாளர் ஜோனதன் ஜோசஃப் தெரிவிக்கிறார்.
தொழில் துறையினர் வெறுக்கும் ஒரு விஷயம் என்றால், அது “நிச்சயமற்ற தன்மை”. இதன் சிறிய விளைவை உலக பங்குச் சந்தை திங்கட்கிழமை கண்டது.
டிரம்ப் தனது முடிவை இவ்வளவு உடனடியாக மாற்றிக்கொள்கிறார் என்றால், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் அவரது ஆட்சியில் எந்த முடிவிலும் தெளிவான நிலைப்பாடு இருக்காது என்று குறிக்கிறது.
வரி விதிப்புகளை தவிர்ப்பதற்காக சமீபத்தில், நிறைய நிறுவனங்கள் தங்கள் தொழில்முறையை சற்று மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. உதாரணமாக, நிறைய நிறுவனங்கள் அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக சீனா, மெக்சிகோ மற்றும் இந்தியா நோக்கி நகர்ந்துள்ளன.
டிரம்பின் வரி விதிப்புப் பட்டியலில் அடுத்து எந்த நாடு உள்ளது என்பது தெரியாததால், முதலீட்டாளர்களுக்கு எந்த நாட்டில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்வது சிக்கலாக உள்ளது.
எனினும் அமெரிக்காவின் இந்த முடிவை பல அரசு அதிகாரிகளும் தொழிலதிபர்களும் இதனை நல்ல செய்தி என்று கூறுகின்றனர். ஆனால், இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருப்பது தற்காலிகமானது தான் என்பது அவர்களுக்கு தெரியும்.
அமெரிக்கா ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கான சங்கத்தின் தலைவர் பில் ஹான்வே, ஆட்டோ மொபைல் துறை வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும், எனினும் நிலைமைகள் நிச்சயமில்லாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ மொபைல் துறையை பன்னாட்டு துறை என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க விநியோகஸ்தர்கள், கார் தயாரிப்பு பாகங்களை அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்க தயாராக இல்லை என்று கூறினார்.
கனடாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்ரின் பியட்டி, வரி விதிப்பை நிறுத்தி வைத்தது நல்ல விஷயம் என்றாலும், ஃபெண்டனில் டிரம்புக்கு உண்மையிலேயே ஒரு பிரச்னை தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கனட வர்த்தக அமைப்பின் முன்னாள் தலைவருமான பியட்டி, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கனடா பணியவில்லை என்று கூறுகிறார்.
டிரம்ப் மற்றும் ட்ரூடோவுக்கு இடையிலான ஒப்பந்தத்தை குறித்து, “இந்த ஒப்பந்தம் முடியப் போவதில்லை, இது இரு நாடுகளுக்கும் சரியானதே” என்று கூறியுள்ளார் .
சீனா மீதான வரி விதிப்பு என்னவாகும்?
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியை செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது டிரம்பின் அரசு. இந்த முடிவில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.
இந்த வார இறுதிவரை சீன அதிபரிடம் டிரம்ப் பேசப்போவதில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.
சீனா மீதான வரிகள் மேலும் உயர்த்தப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
“சீனா ஃபெண்டனில் அனுப்பாது என்று நம்புகிறோம், அப்படி செய்தால் வரிகள் மேலும் அதிகரிக்கப்படும்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
ஃபெண்டனில் அமெரிக்காவின் பிரச்னை என்று சீனா கூறுகிறது. உலக வர்த்தக அமைப்பில், இந்த வரி விதிப்புகளை சீனா எதிர்க்கும் என்றும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவிக்கிறது. அதே நேரம் சீனா பேச்சுவார்த்தைகளுக்கு தனது கதவுகளை திறந்து வைத்திருப்பதாகவும் சொல்கிறது.
வெள்ளை மாளிகையின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு அழைப்பு இருக்கலாம், என்று டிரம்ப் கூறியிருந்தார். சீனா மீதான 10% வரி விதிப்பை “ஆரம்பம்” மட்டுமே என்று கூறும் டிரம்ப், ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்றால், வரிகள் மேலும் உயர்த்தப்படும் என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு