அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தன் அமைச்சரவைக்குத் தேர்வு செய்திருக்கும் நபர்களில் பலர் தவறான நடத்தை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
டிரம்பின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ள பீட் ஹெக்செத் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அமைச்சரவையில் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட அதிகம் சாத்தியங்கள் இருக்கும் மாட் கேட்ஸ், ஒரு நெறிமுறை விசாரணையை எதிர்கொள்கிறார்.
சுகாதார செயலாளராக நியமிக்கப்பட சாத்தியங்கள் இருக்கும் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். அதற்காக அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.
வரும் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்கும்போது, அவரின் அமைச்சரவைக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும்.
செனட் சபை குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற போதிலும், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இருதரப்பு விசாரணைகளின் போதும் தீவிரமான கேள்விகளை எதிர்கொள்வார்கள்.
டிரம்பின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு செயலாளர் தேர்வு
கடந்த 2017ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் டிரம்பின் பாதுகாப்பு செயலாளராகத் தேர்வு செய்யப்படவுள்ள ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடந்த போர்களில் அனுபவம் பெற்றவருமான ஹெக்சேத், கைது செய்யப்படவில்லை, மேலும் அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சுங் கூற்றுபடி, “ஹெக்செத் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறார் மற்றும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை” என்றார்.
பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்-இன் செய்தி அறிக்கையில் மற்றொரு முக்கியத் தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெக்சேத் ஒரு “வெள்ளையின மேலாதிக்கத்தை” குறிக்கும் டாட்டூவை உடலில் குத்தியிருப்பதாக நினைத்த அவரது சக ராணுவ வீரர்களே அவரை அச்சுறுத்தலாகக் கருதியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
ஆனால் ஹெக்சேத் தனக்கு எந்தக் கடும்போக்குவாதக் குழுக்களுடனும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.
மினசோட்டா நேஷனல் கார்டின் முன்னாள் உறுப்பினரான அவர், தனது தோள்பட்டையில் “Deus Vult” என்ற வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளார். இந்த லத்தீன் சொற்றொடருக்கு “கடவுளின் சித்தம்” என்று பொருள். இந்த முழக்கம் இடைக்காலத்தில் சிலுவைப் போர்களின்போது கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்டது.
ஓய்வுபெற்ற மாஸ்டர் சார்ஜென்ட் டெரிகோ கெய்தர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அவர் தனது தோள்பட்டையில் பச்சை குத்தியிருப்பதை நான் பார்த்தேன், அந்த வாக்கியம் கடும்போக்கு குழுக்களுடன் தொடர்புடையது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராணுவத் தலைமைக்குத் தகவல் தெரிவித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் டெரிகோ கெய்தர் கூறினார்.
அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸ் ஹெக்சேத்தை ஆதரித்துப் பேசினார்.
“டாட்டூவில் இருந்த அந்த லத்தீன் சொற்றொடர் ஒரு கிறிஸ்தவ பொன்மொழி மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்.
இதுபோன்ற செய்தியை வெளியிட்டு, ஏபி செய்தி முகமை “வெறுக்கத்தக்க கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையைப்” பரப்புவதாக ஜே.டி.வான்ஸ் குற்றம் சாட்டினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் பதவியேற்கும் வரை ஹெக்செத் வாஷிங்டன் டி.சி.யில் அதிகாரியாகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் இதுதொடர்பாகப் பகிர்ந்திருந்த ஹெக்சேத், தனது டாட்டூவால் தான் பணியை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தேர்வு செய்திருக்கும் அட்டர்னி ஜெனரல் மீதான குற்றச்சாட்டுகள்
அட்டர்னி ஜெனரல் பதவிக்கு டிரம்பின் தேர்வான மாட் கேட்ஸும் சர்ச்சைக்குரிய பிம்பத்தைக் கொண்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் மீது தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த வியாழன் அன்று, அமெரிக்க நீதித்துறையை வழிநடத்த டிரம்ப் அவரின் பெயரைப் பரிந்துரைத்த சில மணிநேரங்களில், மாட் கேட்ஸ் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உள்ள தனது ஃப்ளோரிடா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் அவர் மீதான சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு, பிரசார நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை
அவையின் சபாநாயகர் மைக் ஜான்சனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.
கேட்ஸ் அவையில் உறுப்பினராக இல்லாததால் அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார். அதைப் பகிரங்கப்படுத்துமாறு உறுப்பினர்கள் கோரிய போதிலும், அது ரகசியமாக வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, கேட்ஸ் பற்றி `ஹவுஸ் எதிக்ஸ் கமிட்டிக்கு’ (அவையின் நெறிமுறைக் குழு)சாட்சியம் அளித்த இரண்டு பெண்களுக்கான வழக்கறிஞர், விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு சட்ட வல்லுநர்களிடம் வலியுறுத்தினார்.
வழக்கறிஞர், ஜோ லெப்பார்ட், சிபிஎஸ் நியூஸிடம், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் ஒருவர் 2017ஆம் ஆண்டில் ஃப்ளோரிடாவில் கேட்ஸ் ஒரு மைனர் பெண்ணுடன் உடலுறவு கொண்டதைக் கண்டதாகக் கூறினார். எனவே, அவையின் நெறிமுறைக் குழு கேட்ஸ் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு லெப்பார்ட் வலியுறுத்தினார்.
இருப்பினும், கடந்த ஆண்டு நீதித்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி, கேட்ஸ் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவிட மறுத்துவிட்டது. முன்னதாக, ஆர்லாண்டோவில் ஒரு பார்ட்டியில் 17 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்பட்டதையும் கேட்ஸ் மறுத்தார்.
ஃப்ளோரிடாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட 42 வயதான கேட்ஸ், “என்னை அழிக்க பொய்களை ஆயுதமாகப் பயன்படுத்த முயல்கிறார்கள்” என்று எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை என்று பதிவிட்டார்.
டிரம்ப்பின் சுகாதார செயலாளர் தேர்வுக்கு எழுந்த விமர்சனம்
சுகாதார செயலாளராக (அமெரிக்க சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைகள் துறையின் தலைவர்) டிரம்ப் தேர்வு செய்திருக்கும் நபரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் மீதும் சர்ச்சையான பிம்பம் உள்ளது.
கென்னடி, ஆர்.எஃப்.கெ ஜூனியர் என்று அறியப்படும் இவர் ஒரு தடுப்பூசி எதிர்ப்பு ஆர்வலர். அமெரிக்க பங்குச் சந்தையில், உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாகச் சரிந்தன.
“பிக் ஃபார்மாவை” (Big Pharma) முறியடிப்பதாக சபதம் செய்த ஒரு நபரை டிரம்ப் சுகாதாரத் துறையில் நியமிக்கத் தேர்வு செய்திருப்பது மருந்து நிறுவனங்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த முடிவுக்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றினர்.
சுமார் 25,000 உறுப்பினர்களைக் கொண்ட சுகாதார நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க பொது சுகாதார சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் சி பெஞ்சமின் பிபிசியிடம், நோய்த்தடுப்பு மருந்துகள் குறித்த கென்னடியின் விமர்சனம் “ஏற்கெனவே நாட்டில் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக” கூறினார்.
ஜார்ஜ் சி பெஞ்சமின் மேலும் கூறுகையில், “சுகாதாரத் துறைக்கு கென்னடி முற்றிலும் தவறான தேர்வு” என்று கூறினார்.
டிரம்ப் இதுவரை தனது தேர்வுகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
அதிபராகத் தேர்சு செய்யப்பட்டு சில நாட்கள் கடந்த நிலையில் டிரம்ப் இன்னும் தன் அமைச்சரவையின் முழு பணியிடங்களுக்கும் நியமனங்களைத் தேர்வு செய்யவில்லை. நிதியமைச்சர் மற்றும் எஃப்.பி.ஐ. தலைவர் நியமனம் குறித்து இதுவரை அவர் யாருடைய பெயரையும் அறிவிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு