ஃப்ளோரிடா மாகாணத்தில் சமீபத்தில் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் மற்றொரு சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றுவது குறித்து டிரம்ப் பேசினார்.
“மிக விரைவில், ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். ஏனென்றால் அது எங்களுடையது. மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்காவின் வளைகுடா என்று மாற்றப் போகிறோம்,” என்று ஃப்ளோரிடாவில் டிரம்ப் அறிவித்தார்.
“அமெரிக்காவின் வளைகுடா… என்ன அழகான பெயர். இது சரியாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.
டிரம்ப், அவரது அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்காமல், மெக்சிகோவை பற்றித் தொடர்ந்து பேசினார். “லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அனுமதிப்பதை மெக்சிகோ நிறுத்த வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் அறிக்கைக்கு மெக்சிகோ எதிர்வினை என்ன?
பின்னர், மெக்சிகோ மற்றும் கனடா மீது வரி விதிக்கும் அச்சுறுத்தல் குறித்து டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
மெக்சிகோ வளைகுடாவின் பெயரை எப்படி அல்லது எப்போது மாற்றுவார் என்று டிரம்ப் கூறவில்லை. ஆனால் அவரது கருத்துகளுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன், விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துவதாகக் கூறினார்.
“அதிபர் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஒரு சிறந்த தொடக்கத்தை பெற்றுள்ளது” என டெய்லர் கிரீன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் ஒரு சர்வதேசப் பெருங்கடல், கடல் அல்லது வளைகுடாவின் பெயரை மாற்ற முடியுமா?
ஆனால் உண்மையில், மெக்சிகோ வளைகுடா யாருக்குச் சொந்தமானது என்பதுதான் இங்கு கேள்வி.
மெக்சிகோ வளைகுடா 16 முதல் 20 லட்சம் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பெருங்கடல் படுகை. இது கிழக்கு மெக்சிகோ, தென்கிழக்கு அமெரிக்கா மற்றும் மேற்கு கியூபாவின் கடற்கரைகள் வரை நீண்டுள்ளது.
மெக்சிகோவின் தமௌலிபாஸ், வெராக்ரூஸ், தபாஸ்கோ, காம்பேச், யுகடன் ஆகிய ஐந்து மாகாணங்கள் இந்த வளைகுடாவில் கடற்கரைகளைக் கொண்டுள்ளன.
அமெரிக்க மாகாணங்களான ஃப்ளோரிடா, அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ் மற்றும் கியூபாவின் பினார் டெல் ரியோ, ஆர்டெமிசா ஆகிய மாகாணங்களின் கடற்கரைகளும் இந்த வளைகுடாவில் உள்ளன.
அதிக எண்ணெய் இருப்பு உள்ள பகுதியா?
இந்த வளைகுடா உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் ஒன்று. அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 14 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 5 சதவீதமும் இந்த வளைகுடாவில் இருந்து கிடைக்கிறது.
மெக்சிகோவுக்கும் இந்த வளைகுடா மிகவும் முக்கியமானது, ஏனெனில் மெக்சிகோவுக்கு இங்கிருந்து கிடைக்கும் எண்ணெய் அதன் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
‘ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு’ போன்றவற்றின் கீழ், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கியூபா, மெக்சிகோ மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு இடையே சர்வதேச கடல் எல்லை வரையறைக்கான ஒப்பந்தங்கள் உள்ளன.
மிக உயர்ந்த அதிகாரமிக்க அமைப்பான சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு (IHO), அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கியூபா இடையே மெக்சிகோ வளைகுடாவின் எல்லை வரையறைகளை வகுத்துள்ளது.
மெக்சிகோ வளைகுடா என அழைக்கப்படுவது ஏன்?
இந்த வளைகுடா 16ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரைபடத்தில் மெக்சிகோ வளைகுடா என்று முதன்முதலாகப் பெயரிடப்பட்டது.
“கடந்த 1580களில், ஆய்வாளர் பிரான்சிஸ் டிரேக்கின், கரீபிய பயணங்களுக்கான வரைபடங்களை உருவாக்கிய பாப்டிஸ்ட் போசியோ தனது வரைபடங்களில் அந்தப் பகுதியை ‘மெக்சிகோ வளைகுடா’ என்று பெயரிட்டார்.”
இந்தத் தகவலை, செயின்ட் அகஸ்டின் ரெக்கார்ட் என்ற ஃப்ளோரிடா நாளிதழில் சூசன் பார்க்கர் பகிர்ந்துள்ளார். அவரது வரைபடம் “சர் பிரான்சிஸ் டிரேக்கின் மேற்கிந்திய தீவுகளுக்கான பயணத்தின் முழு வழியின் பார்வை” என்று தலைப்பிடப்பட்டது.
“டி ப்ரேயின் 1591ஆம் ஆண்டின் வரைபடமும் மெக்சிகோ வளைகுடா என்ற பெயரைப் பயன்படுத்துவதாக” பார்க்கர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1630ஆம் ஆண்டின் மற்றொரு வரைபடம் இந்தப் பகுதியை “புதிய ஸ்பெயின் விரிகுடா” என்று அழைத்தது. ஆனால் மெக்சிகோ வளைகுடா என்பது 400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பெயராக உள்ளது.
வளைகுடாவின் பெயரை மாற்ற முடியுமா
மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கு மெக்சிகோ மற்றும் கியூபாவிடம் இருந்து டிரம்ப் ஒப்புதல் பெற வேண்டும்.
மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம், “நாம் ஏன் மெக்சிகோ-அமெரிக்க வளைகுடா என்று அழைக்கக்கூடாது? அது நன்றாக இருக்கிறது” என்று டிரம்பின் அறிவிப்புக்கு புதன்கிழமை பதிலளித்தார்.
ஆனால் மெக்சிகோவின் பொருளாதார அமைச்சர் மார்செலோ எப்ரார்ட், இந்தக் கடல் “மெக்சிகோ வளைகுடா என்று தொடர்ந்து அழைக்கப்படும்” என்றார்.
மேலும் “இதுபோன்ற அறிக்கைகளுக்கு நாம் ஒவ்வொரு நாளும் பதிலளிக்க முடியாது. அடுத்த 30 ஆண்டுகளைப் பற்றி பேசினால், அது மெக்சிகோ வளைகுடா என்று தொடரும். பெயரை மாற்றும் விவாதத்தில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாகத் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்றும் எப்ராட் குறிப்பிட்டார்.
வளைகுடாவை மறுபெயரிட, டிரம்புக்கு சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலவியல் பெயர்கள் நிபுணர்கள் குழு (UNGEGN) உள்படப் பல சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடு மற்றும் ஒப்புதல் தேவை.
கூடுதலாக, ஒரு புதிய பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மூன்று நாடுகளும் புதிய பெயரை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் வகையில் தங்கள் அதிகாரப்பூர்வ வரைபடங்களையும் சட்டங்களையும் புதுப்பிக்க வேண்டும்.
வளைகுடாவின் பெயரை ஒருதலைபட்சமாக டிரம்பால் மாற்ற முடியுமா?
பெயர் மாற்றம் தொடர்பாக மெக்சிகோ மற்றும் கியூபா நாடுகளின் எதிர்ப்பு இருந்தாலும், டொனால்ட் டிரம்ப் விரும்பினால் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சூழ்நிலையில் மற்ற நாடுகள் இந்தப் புதிய பெயரை அங்கீகரிக்காது.
அமெரிக்காவின் அரசாங்கம், இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கான சட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. இதற்காக, நிலவியல் பெயர்கள் (பிஜிஎன்) என்ற அமெரிக்க அரசின் வாரியம் ஒன்று உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நிலவியல் பெயர்கள் குறித்த இறுதி முடிவை இந்த வாரியம் எடுக்கும்.
நிலவியல் இடங்களின் பெயர்களை இந்த வாரியம் மட்டும் முடிவு செய்வதில்லை. ஆனால் அமெரிக்க கூட்டாட்சி அமைப்புகள், மாநில அல்லது உள்ளூர் அரசுகள் மற்றும் பொதுமக்களால் முன்மொழியப்பட்ட புதிய பெயர்களை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை இந்த வாரியம் எடுக்கும்.
டிரம்பின் எண்ணம் நிறைவேறும் பட்சத்தில், ஓர் இடத்தின் பெயரை மாற்றிய முதல் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருக்க மாட்டார்.
இதற்கு முன்னதாக, 2015ஆம் ஆண்டில், வட அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான மவுன்ட் மெக்கின்லியின் பெயரை டெனலி மலை என மாற்றுவதற்கான அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் கோரிக்கையை நிலவியல் பெயர்களுக்கான அமெரிக்க வாரியம் அங்கீகரித்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக, அலாஸ்காவின் பூர்வீகவாசிகள் அதை டெனலி மலை என்று அழைத்தனர்.
ஓஹையோ பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியான வில்லியம் மெக்கின்லியின் நினைவாக இந்த மலைக்குப் பெயரிடப்பட்டது. மெக்கின்லி 1896இல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் ஆறு மாதங்களில் படுகொலை செய்யப்பட்டார்.
மெக்கின்லி அலாஸ்காவில் கால் வைத்ததில்லை. பூர்வீக இந்தியர்களுடனான உறவு மேம்படும் வகையில் இந்த சிகரத்தின் பெயரை மாற்றுவதாக பராக் ஒபாமா தெரிவித்தார்.
மேலும், டெனலி மலையை மவுண்ட் மெக்கின்லி என மறுபெயரிடப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள டிரம்பின் கோரிக்கையை நிலவியல் பெயர்களுக்கான அமெரிக்க வாரியம் அங்கீகரித்தால், மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடப் பெயர்களுக்கான கருத்து வேறுபாடு எழுவது இதுவே முதல் முறையாக அமையாது.
உதாரணமாக, அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மற்றும் மெக்சிகோவின் சிஹுவாஹுவா, கோஹுயிலா, நியூவோ லியோன் மற்றும் தமௌலிபாஸ் மாகாணங்களுக்கு இடையிலான எல்லையாகச் செயல்படும் ஒரு நதி இரு நாடுகளாலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
அமெரிக்கா இதை ரியோ கிராண்டே என்றும், மெக்சிகோ ரியோ பிராவோ என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.