டொனால்ட் ஜான் டிரம்ப் 1946ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி நியூயார்க் மாகாணத்தின் பெருநகரமான குயின்ஸில் பிறந்தார்.
டிரம்ப் ஐந்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் – பிரெட் ஜூனியர் மற்றும் ராபர்ட், இரண்டு சகோதரிகள்- மரியான் மற்றும் எலிசபெத்.
டிரம்புடன் பிறந்தவர்களில் எலிசபெத்தை தவிர மற்ற மூன்று பேரும் தற்போது உயிருடன் இல்லை.
அவரது தந்தை ஃப்ரெட் நியூயார்க்கில் ஒரு வெற்றிகரமான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தார். டிரம்ப் முதன்முதலில் 1968இல் தனது தந்தையின் வணிகத்தில் சேர்ந்தார். ஆனால் விரைவில் மன்ஹாட்டனில் தன் பாணியில் குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி பிரபலமானார்.
`டிரம்ப்’ என்ற பிராண்ட் பெயரைக் கொண்ட பிற சொத்துகள், கேசினோக்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஹோட்டல்கள் – அட்லான்டிக் சிட்டி, சிகாகோ, லாஸ் வேகாஸ் முதல் இந்தியா, துருக்கி, பிலிப்பைன்ஸ் வரை அமைக்கப்பட்டன.
டொனால்ட் டிரம்பின் பகட்டான பாணி, நியூயார்க்கின் வணிக உலகில் தனித்து நிற்க உதவியது.
டிரம்ப் பொழுதுபோக்குத் துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டார். `தி அப்ரென்டிஸ்’ (The Apprentice) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பொழுதுபோக்கு உலகில் ஒரு நட்சத்திரமாக அவரது எழுச்சி தொடர்ந்தது.
மூன்று முறை திருமணம் செய்துகொண்ட டிரம்பிற்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர் தனது முதல் மனைவி இவானா ஜெல்னிகோவாவை 1977இல் மணந்தார்.
டிரம்ப் தனது மூன்றாவது மனைவியான மெலனியா நாஸை 2005இல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சந்தித்தபோது, டிரம்பிற்கு வயது 52 மற்றும் மெலனியாவிற்கு வயது 28.
அவரது அரசியல் வாழ்க்கை 2015இல் தொடங்கியது. குடும்பத்தினர் சூழ, டிரம்ப் டவரில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.
ஜூன் 2015இல் அதிபர் தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை முதன்முதலில் அறிவித்தபோது “அமெரிக்கர்களின் கனவுகளை மீண்டும் பெரிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருவேன்” என்று உறுதியளித்தார்.
பல்வேறு சர்ச்சைகள் நிறைந்த பிரசாரத்திற்குப் பிறகு, டிரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, 2017இல் அமெரிக்காவின் 45வது அதிபராகப் பதவியேற்றார்.
டிரம்ப் அதிபர் பதவியில் இருந்தபோது, அந்தக் காலக்கட்டம் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு ஒரு நிச்சயமற்ற காலமாக இருந்தது. வெளிநாட்டு தலைவர்களுடன் வெளிப்படையாக மோதல்களில் ஈடுபட்டார்.
அவர் முக்கிய காலநிலை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறும் முடிவுகளை எடுத்தார். சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார்.
டிரம்பின் அதிபர் பதவியின் இறுதி ஆண்டில் அவர் கோவிட் பேரிடரைக் கையாண்ட விதத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. டிரம்பின் 2020 தேர்தல் பிரசாரத்தின்போது கோவிட் பாதிப்பால் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டிரம்ப் 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி அந்த முடிவை ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர் ஜனவரி 6ஆம் தேதி வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒன்றிணைய வலியுறுத்தினார்.
அந்தப் பேரணி ஒரு கலவரமாக மாறியது. அவரது அரசியல் வரலாற்றின் இரண்டாவது பெரிய குற்றச்சாட்டு எழுவதற்கு அந்த நிகழ்வு வழிவகுத்தது.
அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகத் தோன்றியது, ஆனால் அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
குடியரசுக் கட்சி வேட்பாளராக விரைவில் முன்னிறுத்தப்பட்டார். 91 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பொதுத்தேர்தல் பிரசாரத்தை டிரம்ப் தொடங்கினார்.
மே 2024இல், 2016 தேர்தலுக்கு முன்னதாக வயது ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் செலுத்தியது தொடர்பான 34 வழக்குகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரசாரப் கூட்டத்தில் 20 வயதான துப்பாக்கி ஏந்திய நபர், டிரம்ப்பை படுகொலை செய்ய முயன்றார்.
சில நாட்களுக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அவர் கட்சியின் அதிபர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப்தான், அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபர். அவரது பதவிக் காலம் முடியும்போது அவருக்கு 82 வயது ஆகியிருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.