பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்ப், மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிப்பதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை. “அதை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, டிரம்ப் அமைப்பு “டிரம்ப் 2028” என்று எழுதப்பட்ட சிவப்பு நிற தொப்பிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவற்கான ஒரு சைகையாக இது பார்க்கப்படுகிறது.
ஆனால், அந்த நேரத்திற்குள் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இரண்டு முறை பதவி வகித்திருப்பார். இது அமெரிக்க அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 50 டாலர் விலையுள்ள அந்த தொப்பிகள் வெளியிடப்பட்டன. அப்போது டிரம்ப், மூன்றாவது முறை பதவி வகிக்க விரும்புவது பற்றி “நகைச்சுவையாகச் சொல்லவில்லை” என்று கூறியிருந்தார்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், “யாரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது” என்று தெளிவாகக் கூறுகிறது.
ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலரும், டிரம்பும் அதற்கு வேறு சில வழிகள் இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் ஏன் மூன்றாவது முறை பற்றிப் பேசுகிறார்?
அக்டோபர் 27 அன்று ஆசிய பயணத்தின் போது, மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி வகிப்பதற்கான வாய்ப்பு பற்றி செய்தியாளர்கள் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதைப்பற்றி நான் உண்மையில் யோசிக்கவில்லை. ஆனால் எனக்கு இதுவரை கிடைத்ததிலேயே மிகச்சிறந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது உள்ளன,” என்று பதிலளித்தார்.
79 வயதான அதிபரான டிரம்ப் மீண்டும் ஒரு அதிபராக வருவதற்கான ஒரு “திட்டம்” தயாராகி வருகிறது என டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முந்தைய என்பிசி நேர்காணலில், “அதைச் செய்யக்கூடிய சில வழிகள் இருக்கின்றன” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும் அவர், “நான் நகைச்சுவையாகச் சொல்லவில்லை… பலரும் நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம் இது இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது, நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று சொல்கிறேன்” என்றார்.
இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் 82 வயதாகும் டிரம்பிடம், “நாட்டின் மிகவும் கடினமான வேலையில்” தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, “எனக்கு வேலை செய்வது பிடிக்கும்,” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
இது குறித்து டிரம்ப் கருத்து தெரிவிப்பது முதல் முறையல்ல. ஜனவரி மாதத்தில் அவர் ஆதரவாளர்களிடம், “ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது நான்கு முறை பணியாற்றுவது என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்,” என்று கூறினார்.
ஆனால் பின்னர், அது “போலி செய்தி ஊடகங்களுக்காக” சொல்லப்பட்ட நகைச்சுவை என விளக்கம் அளித்தார்.
ஏப்ரல் மாதத்தில், டிரம்பின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வணிகக் கடை “டிரம்ப் 2028” என்ற வாசகத்துடன் தொப்பியை 50 டாலருக்கு விற்பனை செய்யத் தொடங்கியது. அதற்கான விளம்பரப் படத்தில் அவரது மகன் எரிக் டிரம்ப் அந்தத் தொப்பியை அணிந்திருந்தார். அந்தப் பக்கத்தில் “எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது” என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் யாரும் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி வகிக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது.
“யாரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. வேறு ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபராக இருந்தவரும் அடுத்த ஒரு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது” என அதன் 22வது திருத்தம் கூறுகிறது.
அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்றால், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலும், மாகாண அரசுகளில் முக்கால்வாசி அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படும்.
டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தி வந்தாலும், அரசியலமைப்பை மாற்றத் தேவையான அளவுக்கு அதனிடம் பெரும்பான்மை இல்லை. மேலும் , 50 மாகாணங்களில் 18 மாகாண சட்டமன்றங்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் எப்படி மூன்றாவது முறையாக அதிபராக முடியும்?
அரசியலமைப்பில் ஒரு ஓட்டை இருப்பதாகவும், அது இதுவரை நீதிமன்றத்தில் சோதிக்கப்படவில்லை என்றும் டிரம்பின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
22வது திருத்தம் ஒருவரை இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு “தேர்ந்தெடுக்கப்படுவதை” மட்டுமே வெளிப்படையாகத் தடை செய்கிறது. ஆனால், “அதிபர் பதவி விலகிய பின் மற்றொருவர் பதவி ஏற்பது” பற்றி எதுவும் கூறவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
அந்தக் கோட்பாட்டின்படி, 2028 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றொரு வேட்பாளரின், ஒருவேளை தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் துணை அதிபர் வேட்பாளராக தேர்தலில் நிற்கலாம். அவர்கள் வெற்றி பெற்றால், புதிய அதிபர் பதவியேற்று உடனடியாக ராஜினாமா செய்யலாம். அதனால், டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்கலாம்.
டிரம்பின் முன்னாள் ஆலோசகரும் பாட்காஸ்டருமான ஸ்டீவ் பானன் தி எகானாமிஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், “டிரம்ப் 2028-இல் மீண்டும் அதிபராக இருப்பார். மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், “சரியான நேரத்தில் அந்தத் திட்டம் என்ன என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்,” என்றும் கூறினார்.
ஆனால், டிரம்ப்தான் அந்த யோசனையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“மக்கள் அதை விரும்புவார்கள் என நினைக்கவில்லை. அது சரியாக இருக்காது” என்று டிரம்ப் கூறினார்.
மூன்றாவது முறையாக அதிபர் பதவி வகிப்பதற்கான வாய்ப்பை டிரம்ப் திறந்து வைத்திருந்தாலும், அதை எப்படிச் செய்வார் என்பதற்கு டிரம்ப் இதுவரை தெளிவான விளக்கம் தரவில்லை.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் மூன்றாவது முறையாக பதவியேற்பதை யார் எதிர்க்கிறார்கள்?
ஜனநாயகக் கட்சியினர் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
“அரசாங்கத்தைக் கைப்பற்றி நமது ஜனநாயக அமைப்பை அழிப்பதற்கான அவரது தெளிவான முயற்சியில் இது மற்றொரு ஆபத்தான படி” என்று நியூயார்க் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் கோல்ட்மேன் கூறினார். அவர், டிரம்பின் முதல் பதவி நீக்க விசாரணையில் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர்.
“காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினர் உண்மையாக அரசியலமைப்பை மதிப்பவர்களாக இருந்தால், மூன்றாவது முறையாக பதவி வகிக்க வேண்டும் என்ற டிரம்பின் ஆசையை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிரம்பின் சொந்தக் கட்சிக்குள்ளும் இதைப் பற்றிய எதிர்மறையான கருத்துகள் உள்ளன.
குடியரசுக் கட்சி செனட்டர் மார்க்வேன் முல்லின், பிப்ரவரி மாதத்தில், டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு கொண்டுவரும் முயற்சியை ஆதரிக்க மாட்டேன் என்றார்.
“அமெரிக்க மக்கள் முடிவு செய்யாவிட்டால், நான் அரசியலமைப்பை மாற்றப் போவதில்லை” என்று அவர் என்பிசியிடம் தெரிவித்தார்.
அதேபோல், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம் கோல், இந்த யோசனை “தீவிரமாக பேசக்கூடிய அளவுக்கு யதார்த்தமானதல்ல, மிகவும் கற்பனையானது” என்று குறிப்பிட்டார்.
சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் தேர்தல் சட்டப் பேராசிரியரான டெரெக் முல்லர், அரசியலமைப்பின் 12வது திருத்தம் “அரசியலமைப்புச் சட்ட ரீதியாக அதிபர் பதவிக்கு தகுதியற்ற எந்தவொரு நபரும் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தகுதி பெற முடியாது” எனக் கூறுகிறது என்றார்.
அதாவது, ஒரு நபர் இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்திருந்தால், அவர் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முடியாது என்று அவர் விளக்கினார்.
“அதிபர் பதவிக்கால வரம்புகளை மீறுவதற்கு ‘ஒரு வித்தியாசமான வழி’ எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றும் முல்லர் கூறினார்.
அதேபோல், பாஸ்டனில் உள்ள நார்த்ஈஸ்டன் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட பேராசிரியர் ஜெரமி பால், சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “மூன்றாவது முறையாக அதிபர் பதவியேற்க எந்த நம்பகமான சட்ட வாதங்களும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
யாராவது இரண்டு முறைக்கு மேல் பதவி வகித்திருக்கிறார்களா?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் நான்கு முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர், பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்.
ஆனால், தனது நான்காவது பதவிக்காலம் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1945 ஏப்ரல் மாதத்தில் அவர் மரணமடைந்தார்.
ரூஸ்வெல்ட் தலைமையிலான காலம், பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகிய இரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. இவைதான் அவர் நீண்டகாலம் பதவியில் இருந்ததற்கான முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர்கள் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்ற சட்ட வரம்பு இல்லை. அது ஜார்ஜ் வாஷிங்டன் 1796-ல் மூன்றாவது முறை போட்டியிட மறுத்ததிலிருந்து தொடங்கிய பாரம்பரியம் மட்டுமே.
ரூஸ்வெல்ட்டின் நீண்டகால ஆட்சியால், இந்தப் பாரம்பரியம் சட்டமாக்கப்பட்டது. 1951-ல் 22வது திருத்தம் இயற்றப்பட்டு, இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சட்டமானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு