• Sun. Feb 1st, 2026

24×7 Live News

Apdin News

டோக்கியோ பேச்சுவார்த்தை: இங்கிலாந்து வருமாறு ஜப்பான் பிரதமருக்கு அழைப்பு

Byadmin

Feb 1, 2026


டோக்கியோவில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜப்பான் பிரதமர் சனயே தகாயிச்சியை (Sanae Takaichi) இங்கிலாந்திற்கு வருகை தருமாறு இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், இரு நாடுகளுக்கிடையேயான உறவு கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தற்போது வலுவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கான நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, டோக்கியோ வந்த ஸ்டார்மர், அங்கு ஜப்பான் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபட்டார். சீனாவுடன் இங்கிலாந்தின் உறவுகளை மீளமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்தது.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளும் தங்களின் “பொது மதிப்புகள்” குறித்து விவாதித்ததுடன், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த திட்டங்களையும் முன்வைத்தன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புக் கூட்டாண்மைகள் மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரிப்பதும் இதில் அடங்கும்.

ஜப்பானில் இம்மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள திடீர் பொதுத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே பிரதமர் தகாயிச்சியின் இங்கிலாந்துப் பயணம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது லிபரல் டெமோகிராடிக் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சித்து வருகிறது.

இந்தச் சந்திப்பு, சீனா–தைவான் இடையிலான சாத்தியமான மோதலில் ஜப்பான் இழுக்கப்படலாம் என்ற தகாயிச்சியின் சமீபத்திய கருத்துகளுக்குப் பின்னர், பிராந்தியத்தில் பதற்றம் நிலவும் சூழலில் நடைபெற்றுள்ளது. உலகளவில் அதிகரித்து வரும் நிலைதடுமாற்றங்களுக்கு தெளிவும் உறுதியும் கொண்ட பதில் அவசியம் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக ஸ்டார்மர் கூறினார். மேலும், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் ஜப்பானின் நிலையான தலைமைத்துவத்திற்காக அவர் நன்றி தெரிவித்தார்.

ஜப்பான் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும், ஐரோப்பாவிற்கு வெளியே இங்கிலாந்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றாகவும் உள்ளது.

By admin