அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அவர் மற்ற நாடுகள் மீது மேற்கொண்டு வரும் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதன் எதிரொலியாக, இந்தியாவில் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொது மக்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் என பல்வேறு தரப்பினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5-6 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்துவருகிறது. செவ்வாய்கிழமை (பிப். 11) சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,060 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 64,480 என்ற உச்சத்தை எட்டியது.
தங்கம் விலை உயர்வு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை தரும் வகையில் இங்கே 10 கேள்விகளும் அதற்கான பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
தங்கம் விலையை தீர்மானிப்பது எது?
உலகளவில் முதன்மையான சந்தை வர்த்தக தளமாக அறியப்படும் லண்டன் புல்லியன் சந்தைதான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது. பெரும் சுரங்க அதிபர்கள், பெரும் தொழிலதிபர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். இப்போது, இந்த சர்வதேச சந்தையிலேயே தங்கத்தின் விலை ஏறிக்தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு, சர்வதேச அரசியல் சூழல், இறக்குமதி வரி, போர்ச்சூழல் போன்ற காரணங்களும் இருக்கின்றன.
மெட்ராஸ் தங்க ஆபரணம் மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசினார்.
அவர் கூறுகையில், “தங்கம் விலை இந்தளவுக்கு உயர்ந்தது எதிர்பார்த்த ஒரு விஷயம்தான். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின், அவருடைய அரசின் கொள்கைகள், குறிப்பாக மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அதுதவிர, சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டாலர் மதிப்பு வலுவாக இருக்கிறது. அதேசமயம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. (திங்கட்கிழமை நிலவரப்படி, ஒரு டாலரின் மதிப்பு ரூ.87.17ஆக உள்ளது.)
உள்ளூர் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். எனவே, தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இவையெல்லாம், தங்கம் விலை உயர்வுக்கான காரணங்களாக உள்ளன.” என தெரிவித்தார்.
பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமா?
“பங்குச் சந்தையும் வீழ்ச்சி அடைந்திருப்பதால், பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக உள்ளது. எனவே தான் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்” என்றார் முதலீட்டு ஆலோசகர் சதீஷ்.
டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்திருப்பதால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலுக்கு நடுவே, தங்கத்தின் மீதான முதலீடு ஒரு மாற்றாக கருதப்படுவதாக அவர் கூறுகிறார்.
டிரம்ப், கனடா, மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். எனினும், 30 நாட்களுக்கு அதை நிறுத்திவைப்பதாக கடந்த வாரத்தின் தொடக்கத்தில் டிரம்ப் அறிவித்தார். ஆனாலும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 10% வரி தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா – சீனா இடையிலான ‘வர்த்தகப் போர்’ காரணமா?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியது. இதையடுத்து, சீனா பதிலுக்கு அமெரிக்க சரக்குகளுக்கு வரி விதித்தது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போருக்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய பங்காற்றுவதாக, முதலீட்டு ஆலோசகர் சதீஷ் தெரிவித்தார்.
“சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர்தான் முக்கிய காரணம். இதனால், அனைத்து மூலப் பொருட்களின் விலையும் உயர்கிறது. இப்படி குழப்பமான சூழலில் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்பதால் அதன் விலை உயர்கிறது.” என சதீஷ் கூறினார் .
தங்கம் விலை உயரும் போக்கு தொடருமா?
“தற்போதைய நிலை அப்படியேதான் தொடரும். 2026ம் ஆண்டில்தான் இந்த நிலை சரிவரும். அப்போதுகூட விலை குறையாது. ஏற்ற-இறக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதில் ஒரு சீரான நிலை ஏற்படலாம்” என்கிறார் சாந்தகுமார்.
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டுமா?
இந்த கேள்விக்கு பதிலளித்த சாந்தகுமார், இந்தாண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1 லட்சம் எனும் நிலையை அடையலாம் என்றார்.
“இந்தாண்டு மார்ச் மாதம் தான் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,000 வரும் என எதிர்பார்த்தோம். ஒரு மாதத்துக்கு முன்பே அந்த விலை வந்துவிட்டது. இந்தாண்டு டிசம்பரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10,000 ரூபாய் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், 3 மாதங்களுக்கு முன்பே, செப்டம்பர் வாக்கில் அந்த விலை வரும் என்ற சூழல் உள்ளது. எனவே, இந்தாண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1 லட்சம் எனும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என்றார் சாந்தகுமார்.
பட மூலாதாரம், Getty Images
விலை தொடர்ந்து உயரும் நிலையில், தங்க நகைகளை வாங்கலாமா?
தங்க நகைகளை தாராளமாக வாங்கலாம் என்கிறார் சாந்தகுமார். “ஏனெனில், விலை இன்னும் உயரத்தான் போகிறது. இந்த சமயத்தில் நகைகளாக வாங்குவது தான் நல்லது.” என்பது அவருடைய கருத்தாக உள்ளது.
இதே கருத்தை பிரதிபலித்தார், முதலீட்டு ஆலோசகர் சதீஷ்.
“தங்க நகைகளை வாங்குவது நல்லதுதான். விலை அதிகமாகிறது என்பதற்காக வாங்காமல் இருப்பது நல்லதல்ல, ஏனெனில் விலை இன்னும் உயருவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.” என்கிறார் சதீஷ்.
தங்க நகைகளை இப்போது விற்கலாமா?
“நகைகளை விற்க வேண்டும் என நினைப்பவர்கள் அதை செய்யலாம். ஏனெனில், நிச்சயமாக நாம் வாங்கிய விலையைவிட விற்கும்போது அதற்கான லாபம் அதிகமாக இருக்கும்.” என்கிறார் சதீஷ்.
நகைகளாக அல்லாமல், வேறு எந்த விதங்களில் இப்போது முதலீடு செய்யலாம்?
பட மூலாதாரம், Getty Images
சில முதலீட்டு ஆலோசனைகளை வழங்கினார் சதீஷ். அதன்படி, டிஜிட்டல் தங்கம், தங்கப் பத்திரம் ஆகியவை நல்ல முதலீடாக இருக்கும் என அவர் கூறினார்.
டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்காமல், அதை டிஜிட்டல் அதாவது மெய்நிகர் (virtual) வழியாக வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்குமான ஒரு முறையாகும். இது ஆன்லைனில் வாங்கலாம்.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழி, தங்கப் பத்திரங்களை வாங்குவது. இதன் மூலம் நீங்கள் வட்டியை பெறலாம்.
வங்கிகள் தங்கம் வாங்குவது ஏன்?
உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல) தங்கத்தை வாங்கி வருகின்றன.
“அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக உள்ளது. டாலரும் தங்கமும் வீழ்ச்சியடையாது என நம்பப்படுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் போது, டாலர் மற்றும் தங்கம் பக்கம்தான் மக்கள் திரும்புவார்கள்” என பொருளாதார பேராசிரியர் அருண் குமார் தெரிவித்தார்.
“இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தை அதிகமாக வாங்குகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால், டாலர்-ரூபாய் மதிப்பை சமன்செய்ய தங்க இருப்பை ரிசர்வ் வங்கி சார்ந்துள்ளது” என கூறினார் முதலீட்டு ஆலோசகர் சதீஷ்.