பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிறது. வரும் மாதங்களிலும் தங்கத்தின் விலை உயர்வு தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஃபோர்ப்ஸ் இந்தியா தரவுகளின்படி, 2000-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 4,400 ரூபாயாக இருந்தது. 2010 இல் இது 20,728 ரூபாயாக அதிகரித்தது. 2020 இல் 50,151 ரூபாயைத் தொட்டது.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டது.
தங்கத்தின் இந்த விலை உயர்வு எவ்வளவு காலம் நீடிக்கும்? இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பு உள்ளதா?
இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் மற்றும் திருமண காலங்களில் தங்கத்திற்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, தங்கத்தின் விலை உயர்வு இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அரே நேரம் கோல்ட்மேன் சாக்ஸ், 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கத்தின் விலையில் மேலும் 6 சதவீதம் வரை உயர்வு காணப்படலாம் என்று கணித்துள்ளது.
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நிலவும் சூழலில், மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதே இதற்கான மிகவும் அடிப்படைக் காரணம்.
கடந்த காலப் போக்குகளைப் பார்த்தால், தங்கத்தில் முதலீடு செய்வது ஒருபோதும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, கடந்த 20 ஆண்டுகளில், தங்கத்தின் விலை குறைந்தது நான்கு ஆண்டுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அந்த காலங்களில் முதலீட்டாளர்களுக்கு சில இழப்புகள் ஏற்பட்டாலும், இந்த நஷ்டமும் ஒற்றை இலக்கத்துடன் மட்டுமே இருந்தது.
உதாரணமாக, 2013 இல் தங்கத்தின் விலை 4.50 சதவீதம் குறைந்தது. அதே சமயம், 2014 இல் 7.9 சதவீதம், 2015 இல் 6.65 சதவீதம் மற்றும் 2021 இல் தங்கத்தின் விலையில் 4.21 சதவீதம் சரிவு காணப்பட்டது.
எனவே, உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் நிலவும்போது, வரி விகிதங்களில் நிச்சயமற்ற நிலை உச்சத்தில் இருக்கும்போது, தங்கத்தில் முதலீடு அதிகரிப்பது இயல்பாகிறது.
சந்தை ஆய்வாளர் ஆசிஃப் இக்பால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசி இந்தியிடம் பேசுகையில், தற்போதைய சூழலில் பல முதலீட்டாளர்கள் தங்கத்தை ஹெட்ஜிங் உத்தியாக, அதாவது சந்தை சரிவு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் உத்தியாகக் கருதுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்படலாம் என்று அஞ்சும் அவர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழியைப் பார்க்கிறார்கள்.
உலகளாவிய சந்தையில் நிச்சயமற்ற தன்மைக்கு டொனால்ட் டிரம்ப் ஒரு காரணம் என்றால், உலகில் நடந்து வரும் போர்களும் மற்றொரு காரணம் என ஆசிஃப் இக்பால் கூறினார்
இப்படியாக, உலகில் நடக்கும் சண்டைகள் தங்கத்தின் விலையைப் பாதித்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கம் வாங்குவதுதான்.
டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தில் வரி விதிப்பு குறித்து அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய சந்தையில் நிலவும் குழப்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கம் வாங்குகின்றன.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, தங்கத்தின் விலை அதிகரித்து வந்தாலும், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி, தங்கள் வெளிநாட்டு நாணய இருப்புகளைப் பல்வகைப்படுத்தவும் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முயற்சிக்கின்றன.
உலக தங்க கவுன்சில் (வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின்) தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் இருப்பில் 15 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன.
டாலரற்ற பொருளாதாரமயமாக்கலும் ஒரு காரணம்
ஒரு நாடு டாலரை விட்டு விலகிச் சென்றாலோ அல்லது விலகலை ஏற்படுத்தினாலோ, அது டாலரற்ற பொருளாதாரமயமாக்கல் என்று அழைக்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நாடுகள் பெரும்பாலும் தங்கள் அன்னியச் செலாவணி கையிருப்பில் டாலர்கள் அல்லது அமெரிக்க கடன் பத்திரங்களை வைத்துக்கொள்கின்றன. மேலும், இந்த கையிருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம், கச்சா எண்ணெய் அல்லது பிற பொருட்களை இறக்குமதி செய்யும்போது டாலரில் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
பல ஆண்டுகளாக டாலர் மீதான இதே அணுகுமுறை தொடர்ந்து வருகிறது.
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் கொள்கைகள் பல நாடுகளில் டாலர் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 2015 மற்றும் 2016 க்குப் பிறகு அமெரிக்கா ரஷ்யா மீது பலவிதமான தடைகளை விதித்த பிறகு சில நாடுகள் டாலர் குறித்து எச்சரிக்கை அடைந்துள்ளன.
மக்கள் இன்னும் தங்கம் வாங்குகிறார்களா?
இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் தங்கம் ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
தங்கம் வாங்குவது இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். தீபாவளி போன்ற பண்டிகைகள் அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இந்தியர்களுக்குத் தங்கம் வாங்குவது முக்கியமாகிறது.
சீனாவுக்குப் பிறகு, உலகில் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோர் நாடாக இந்தியாவே உள்ளது.
இந்நிலையில், தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலிலும், இந்தியர்கள் அதே வேகத்தில் தங்கம் வாங்குகிறார்களா அல்லது இந்த வேகம் சற்று குறைந்துள்ளதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் செய்தித் தொடர்பாளர் சுரிந்தர் மேத்தா கூறுகையில், ”நகைகள் விற்பனையில் 27 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், நாணயங்கள் மற்றும் கட்டிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குகிறார்கள். பெரிய நகரங்களை விடச் சிறிய நகரங்களிலும், பேரூர்களிலும் மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குகிறார்கள்.”
இந்த முறை தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தின் விற்பனை எப்படி இருக்கும் என்று சுரிந்தர் மேத்தாவிடம் நாங்கள் கேட்டோம்.
“கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபாவளியில் தங்கம் சாதனை விற்பனையை எட்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.
நகை மாற்றும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளதா?
இந்தக் கேள்விக்கு சுரிந்தர் பதிலளிக்கையில், “பழைய நகைகளுக்குப் பதிலாகப் புதிய மற்றும் நவீன நகைகளை வாங்குவது இப்போது கிட்டத்தட்ட 30 சதவீத சந்தையாக மாறிவிட்டது. தங்கத்தின் விலை உயர்வால் மக்கள் குறைந்த கேரட் தங்கத்தை வாங்குகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம், ஆனால் அது உண்மை இல்லை. 18 கேரட், 20 கேரட் தங்க நகைகளை மக்கள் வாங்கினாலும், பெரும்பாலான மக்கள் இப்போதும் 22 கேரட் நகைகளை வாங்கவே விரும்புகிறார்கள்,” என்று கூறுகிறார்.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
பட மூலாதாரம், Reuters
இந்தியா அரசின் நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நேர்மையான முறையில் வாங்கப்பட்ட தங்கம் மற்றும் ஆபரணங்களை வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை.
யாரும் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வாங்கலாம் அல்லது வைத்திருக்கலாம். ஆனால், கேட்கப்படும்போது அல்லது சோதனை செய்யப்படும்போது, அதன் சரியான மூலம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் பில்கள் மற்றும் ரசீதுகளும் இருக்க வேண்டும்.
இந்தியாவின் நிதி அமைச்சகத்தின்படி, ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.
இத்துடன், திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள் அனைவரும் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.
எங்கே மலிவான தங்கம் கிடைக்கிறது?
தங்கத்தின் விலை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது.
உதாரணமாக, அந்த நாட்டின் மத்திய வங்கிகளில் எவ்வளவு தங்க இருப்பு உள்ளது, அங்கு அமெரிக்க டாலர் எவ்வளவு பலமாக உள்ளது போன்றவையே தங்கத்தின் தேவை மற்றும் விநியோகத்தை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. மேலும், உள்ளூர் வரிகளும் தங்கத்தின் விலையைப் பாதிக்கின்றன.
ஃபோர்ப்ஸ் வணிக இணையதளத்தின்படி, இந்தியா மற்றும் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, பஹ்ரைன், குவைத், மலேசியா, ஓமன், கத்தார், செளதி அரேபியா, சிங்கப்பூர், துபை, அமெரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் தங்கம் மலிவாகக் கிடைக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
ஒரு ஆண் பயணி தனது பயணத்தின் போது 20 கிராம் தங்கத்தை சுங்க வரி இல்லாமல் கொண்டு வரலாம். ஆனால் இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன – ஒன்று, தங்கத்தின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. மற்றொன்று, அது ஆபரண வடிவில் மட்டுமே இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை, இந்த வரம்பு 40 கிராம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதை விட அதிகத் தங்கம் கொண்டு வந்தால் சுங்க வரி செலுத்த வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு