சட்டவிரோத சுரங்க வழக்கில் தனது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை திருப்பித் தரக் கோரி கலி ஜனார்தன் ரெட்டி சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனார்த்தன் ரெட்டி 2011ஆம் ஆண்டு சட்டவிரோத சுரங்க வழக்கில் கைது செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் வெளியில்தான் இருக்கிறார்.
ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் கலி ஜனார்தன் ரெட்டியிடம் இருந்து சுமார் 53 கிலோ எடையுள்ள 105 தங்க நகைகளை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சிபிஐயிடம் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
தங்க நகைகளைப் பயன்படுத்தாவிட்டால், அது துருப் பிடித்து மதிப்பிழக்கும் அபாயம் உள்ளதாகத் தனது மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால், உண்மையில் தங்கம் துருப் பிடிக்குமா? தங்க நகைகளைப் பயன்படுத்தாமல் மறைத்து வைத்தால் என்ன ஆகும்?
துருப் பிடிப்பது என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
துரு (Rust) என்பது இரும்பு ஆக்சைடு. உலோகவியலின்படி, இரும்பு மற்றும் இரும்புக் கலவைகள் (எஃகு) மட்டுமே துருப் பிடிக்கின்றன.
ஈரப்பதமும் ஆக்ஸிஜனும் இரும்பில் ஒரு வேதியியல் எதிர்வினையை ஏற்படுத்தி, அடர் சிவப்பு அடுக்கை (துரு) உருவாக்குகின்றன. இது துருப் பிடித்தல் என்று அழைக்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கிய வேதியியல் விரிவுரையாளர் வெங்கடேஷ், “இதுபோன்ற ஓர் அடுக்கு உருவான பிறகும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், உலோகம் படிப்படியாக அதன் இயற்கையான வடிவத்தை இழந்து மோசமடையும்.
இரும்பு உலோகக் கலவைகள் பெரும்பாலான நட்டுகள், போல்ட்கள், மின் விசிறிகள், சைக்கிள் சங்கிலிகள் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்களில் பயன்படுத்தப்படுகின்றன.”
இவை வண்ணம் தீட்டுதல், எண்ணெய் பூசுதல், கிரீஸ் பூசுதல் மற்றும் பிற முறைகள் மூலம் துருப் பிடிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.
தங்கம், செம்பு, பித்தளை, வெள்ளி துருப் பிடிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
தங்கம் ஓர் உயர் உலோகம் (Noble metal) என்று அழைக்கப்படுகிறது. தங்கத்தை உயர் வெப்பநிலையில் உருக்கி நகைகள் தயாரிக்கலாம்.
தங்கம் பொதுவான அமிலங்களுடன் வினைபுரிவதில்லை. இது அக்வா ரெஜியா (நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் கலவை) எனப்படும் அமிலத்தில் மட்டுமே கரையக்கூடியது.
வெள்ளியும் ஓர் உயர்-ரக உலோகம்தான். ஆனால் அது காற்றிலுள்ள கந்தகத்துடன் (சிறிய அளவில்) வினைபுரிகிறது.
பித்தளை என்பது துத்தநாகம்-செம்பின் ஒரு கலவை. அது கிட்டத்தட்ட விலை உயர்ந்த நகைகள் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகத்தைப் போலவே தோற்றமளிக்கிறது.
அதனால்தான் பெரும்பாலான சிற்பிகள் சிலைகளைச் செய்ய பித்தளையைப் பயன்படுத்துகிறார்கள்.
துத்தநாகத்தை அதிகம் பயன்படுத்துவது, அந்தத் தயாரிப்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. அதுவே முக்கிய உலோகமாக செம்பு இருக்கும்போது, தயாரிப்பு கருமையாகத் தோன்றும்.
இருப்பினும், பித்தளை துருப் பிடிக்காது, ஆனால் படிப்படியாகத் தேய்ந்து போகிறது அல்லது மங்கிவிடுகிறது. காலச் சிதைவு (Weathering) காரணமாக பித்தளையில் உள்ள துத்தநாகத்தில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. செம்பு மட்டுமே இருக்கும். எனவே, நிறம் மாறுகிறது.
பித்தளை அனைத்து வகையான அமிலங்களுடனும் வேதியியல் ரீதியாக வினை புரிகிறது.
செம்பைப் பொருத்தவரை, சிலர் இன்னும் செம்புக் குவளைகள் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் செம்பு துருப் பிடிக்காது. பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு பச்சை நிற புள்ளிகளை நாம் கவனிக்கலாம். ஆனால், செம்பு வலுவான அமிலங்களுடன் வினை புரிவதில்லை.
சில உலோகங்கள் ஏன் துருப் பிடிப்பதில்லை?
பட மூலாதாரம், Getty Images
தங்கம், செம்பு, பித்தளை, வெள்ளி ஆகியவை துருப் பிடிக்காது.
நம் நாட்டில், 14, 18, 20, 22, 23, மற்றும் 24 காரட்கள் (Carat- தங்கத்தின் தூய்மைத் தரத்திற்கான அலகு) கொண்ட தங்கம் கிடைக்கிறது. இவற்றில், 22, 18 மற்றும் 14 காரட் தங்கம், நகைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
‘தங்கம் ஒருபோதும் துருப் பிடிக்காது” என்று இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) சந்தைப்படுத்தல் அதிகாரி வனஜா பிபிசியிடம் கூறினார்.
குறைந்த தூய்மை கொண்ட 14 காரட் தங்கம் உள்பட எந்த தங்க நகையும் துருப் பிடிக்காது என்று வனஜா கூறினார்.
“தங்க நகைகள் அணிந்தாலும் சரி, சேமித்து வைத்தாலும் சரி, அவை பழையதாகிவிடும், ஆனால் துருப்பிடிக்காது. நீங்கள் நீண்ட நேரம் நகைகளை அணிந்தால், அதில் மஞ்சள் கலந்த பச்சை நிற அடுக்கு உருவாகும், ஆனால் துருப் பிடிக்காது,” என்று அவர் கூறினார்.
தங்கத்தில் உள்ள அசுத்தங்கள் என்பவை, அதாவது செம்பு போன்ற உலோகங்கள், தங்கத்தின் வலிமையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும். அது நகைகளில் ஓர் அடுக்கு உருவாகக் காரணமாகிறது.
தங்க அணுக்கள் மிகவும் நிலையானவை. அதனால்தான் தூய தங்கத்தின் வேதியியல் கலவை, காற்று, நீர் மற்றும் தீவிர வெப்பநிலையால்கூட மாறாது.
“இதனால்தான் மின்னணு சாதனங்களில், குறிப்பாக சர்க்யூட் போர்டுகளில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் வெங்கடேஷ்.