
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
“அவர்களை நான் எதிர்கொண்டபோது நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். ‘இனி ஒருபோதும் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என எச்சரித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் வயதான பெண் என்பதால் மிகவும் பயந்து உதவியற்றவளாக இருந்தேன்”
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 76 வயதான முகமதா பேகம் என்பவர் கொடுத்த புகாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தனது கணவருக்கு சொந்தமான சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துக் கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பேரில், அ.தி.மு.க பிரமுகர் உள்பட 12 பேர் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், மூதாட்டியின் விருப்பத்தின் பேரிலேயே நிலங்கள் விற்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கில் என்ன நடந்தது?
புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?
சிங்கப்பூரில் வசித்து வரும் முகமதா பேகம் என்பவர் கடந்த டிசம்பர் மாதம், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை நேரில் அளித்தார்.
அந்த மனுவில், 2017 ஜனவரி முதல் 2022 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தனது கணவரின் சொத்துகளில் மோசடி நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது கணவர் ஷேக் சிராஜுதீன், தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் கப்பல் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
‘2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய கணவர் சென்னையில் இறந்தார். அப்போது இந்தியாவில் தனியாக வாழ்ந்து வந்தேன். அந்தநேரத்தில் என்னுடைய நலன் விரும்பிகள் போல நடித்த சிலரை நம்பினேன்’ எனப் புகார் மனுவில் முகமதா பேகம் கூறியுள்ளார்.
புகார் மனுவில் ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுள்ள முகமதா பேகம், ‘என் கணவரிடம் வேலை பார்த்ததாகக் கூறி என்னிடம் அவர் பேசினார். அவர் மூலமாக எனக்கு அறிமுகமான சிலர், எனக்கும் என் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் சொத்துகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தனர்’ என்கிறார்.
2019ஆம் ஆண்டில் தெரியாத நபர்கள் சிலர் தஞ்சாவூரில் உள்ள தனது சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதாகவும் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி இவர்களில் சிலர் பயத்தை ஏற்படுத்தியதாகவும் புகார் மனுவில் முகமதா பேகம் கூறியுள்ளார்.
‘இதனால் ஏற்பட்ட பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக அவர்கள் காட்டிய அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து போட்டேன். அவர்களை நம்பி எனது சொத்துகளின் அசல் ஆவணங்களை ஒப்படைத்தேன்’ என்கிறார்.
‘என் குடும்பத்தில் இருந்து என்னைத் திட்டமிட்டு தனிமைப்படுத்தி சொத்துகளின் மீது சதி செய்துள்ளதை ஒருகட்டத்தில் அறிந்தேன். அதற்கான பதிவுகளை சரிபார்த்த போது பல பொது அதிகாரப் பத்திரங்கள் என் பெயரில் மோசடியாக உருவாக்கப்பட்டிருந்தன’ எனக் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு புகாரில் கூறப்பட்டுள்ள நபர்கள் தஞ்சையில் உள்ள எனது வீட்டின் பூட்டுகளை உடைத்து சொத்து ஆவணங்கள், தங்கம், வைர நகைகள், ரொக்கம், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திலும் முகமதா பேகம் புகார் கொடுத்துள்ளார். ‘இதன் பேரில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு எனது புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ எனப் புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
முகமதா பேகத்துக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருடன் நட்பில் இருந்த பெண்ணுடன் உள்ளூரை சேர்ந்த சிலர் கூட்டணி சேர்ந்து சட்டரீதியாக உதவி செய்வதாகச் சொல்லி ஏமாற்றியதாகக் கூறுகிறார், ஷேக் சிராஜூதீனின் சகோதரர் மகன் ஷேக் இலியாஸ்.

‘தஞ்சையில் சுமார் 300 ஏக்கர் நிலம்’
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரில் ஏராளமான நிலங்களை ஷேக் சிராஜுதீன் வாங்கினார். நாஞ்சிக்கோட்டையில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை வாங்கி அதற்கு சிராஜ்பூர் எனப் பெயர் வைத்தார்” எனக் கூறுகிறார்,
“சிங்கப்பூரில் பணம் சம்பாதித்ததால் தனது பெயருடன் பூர் என்ற வார்த்தையை சேர்த்து இந்தப் பெயரை அவர் வைத்தார். தவிர, செங்கிப்பட்டியில் சுமார் 40 ஏக்கர் நிலம், நந்தவனப்பட்டி, நொடியூர், வடுக்கம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 250 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அவர் வாங்கினார்” என்கிறார் அவர்.
“இவற்றில் சில சொத்துகளுக்கு முகமதா பேகத்திடம் பொது அதிகாரப் பத்திரம் பெற்று அவர்கள் பல்வேறு நபர்களுக்கு விற்றுவிட்டனர். பத்திரப்பதிவு நடக்கும் வரை இதைப் பற்றி முகமதா பேகமும் கூட யாரிடமும் கூறவில்லை. தற்போது தான் இவை வெளியில் வருகின்றன” என்கிறார், ஷேக் இலியாஸ்.
தொடர்ந்து பேசிய அவர், “சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் வாழ்ந்த வீட்டை இடித்து திருமண மண்டபம் கட்டும் வேலையில் சிலர் ஈடுபட்டனர். ‘எதையும் மிச்சம் வைக்காமல் இடிக்கின்றனர். என்ன நடக்கிறது?’ என முகமதா பேகத்திடம் கேட்ட பிறகே காவல்துறையில் புகார் கொடுத்தார்” என்கிறார்.
ஷேக் சிராஜுதீன்-முகமதா பேகம் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ‘இவர்களின் பெயர்களில் போலியான ஆவணங்களை உருவாக்கியும் சொத்துகளில் மோசடி செய்துள்ளனர்’ எனவும் புகார் மனுவில் முகமதா பேகம் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவுக்குள் நுழையக் கூடாது என எச்சரித்தனர்’
சில பொது அதிகார பத்திரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகப் புகார் மனுவில் கூறியுள்ள முகமதா பேகம், ‘விற்பனையில் கிடைத்த பணத்தை என் பெயரிலும் என் குழந்தைகளின் பெயரிலும் உருவாக்கப்பட்ட சட்டவிரோத வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர். இந்தக் கணக்குகளை நாங்கள் உருவாக்கவில்லை’ என்கிறார்.
‘ஒருகட்டத்தில் அவர்களிடம் சொத்து குறித்துக் கேட்டபோது, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தினர். நேரடியாக கொலை மிரட்டல் விடுத்து, ‘இனி இந்தியாவுக்குள் ஒருபோதும் நுழையக் கூடாது’ என எச்சரித்தனர்’ என, முகமதா பேகம் தெரிவித்தார்.
இந்த நபர்களின் செயல்களைப் பார்க்கும்போது மறைந்த எனது கணவரின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கு நீண்டகாலமாக சதி செய்துள்ளதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் முகமதா பேகம் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், டிசம்பர் 27-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் 12 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தஞ்சையைச் சேர்ந்த அ.தி.மு.க மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவையின் தலைவரான கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. “என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. முகமதா பேகம் நேரடியாக தஞ்சாவூருக்கு வந்து அனைத்து நிலங்களையும் விற்பனை செய்தார்” என்று கூறினார்.

‘மோசடி செய்வது சாத்தியமில்லை’
நிலத்தை மேம்படுத்தி லேஅவுட் ஆக மாற்றி விற்பதற்கான வேலைகளை தான் செய்து கொடுத்ததாகக் கூறும் கேபிள் செந்தில், “அவர் நேரடியாக என்னிடம் எதுவும் பேசவில்லை. அவரது சட்ட ஆலோசகர்கள் மூலமே அனைத்துப் பணிகளும் நடந்தன” எனக் கூறுகிறார்.
“இதற்காக குறிப்பிட்ட தொகையைப் பேசி முடித்தேன். லேஅவுட் பிரிக்கப்பட்ட பிறகு தேவையற்ற சிக்கல்கள் வரக் கூடாது என்பதால் வங்கிக் கணக்கு மூலமாகவே பணம் வாங்கினேன். அதற்கும் முறையாக வரி கட்டியுள்ளேன்” எனவும் செந்தில்குமார் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் தஞ்சை நகரத்தில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டதால் வழக்குப் போடுமாறு முகமதா பேகத்தை உறவினர்கள் தூண்டுவதாகக் கூறும் கேபிள் செந்தில், “பத்திரப்பதிவுத் துறையில் மோசடி செய்வது சாத்தியமில்லை. ஆதார் சரிபார்ப்பு உள்பட பல்வேறு நடைமுறைகள் வந்துவிட்டன” என்கிறார்.
ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் சிங்கப்பூரில் இருந்து நேரடியாக முகமதா பேகம் வந்து கையெழுத்துப் போட்டதாகக் கூறும் கேபிள் செந்தில், “இந்த நிலங்கள் எல்லாம் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் விற்கப்பட்டுவிட்டன. அங்கு ஏராளமானோர் வீடு கட்டிக் குடியேறிவிட்டனர்” எனக் கூறுகிறார்.

‘650 பத்திர ஆவணங்களில் கையெழுத்து’
“அந்த வகையில் சுமார் 650 ஆவணங்களில் முகமதா பேகம் கையெழுத்திட்டுள்ளார். ஒரு கையெழுத்து தெரியாமல் போட்டுவிட்டதாகக் கூறலாம். இவ்வளவு பத்திரங்களுக்கும் தெரியாமல் யாரும் கையெழுத்துப் போட மாட்டார்கள். தற்போது உறவினர்கள் பேச்சைக் கேட்டு அவர் செயல்படுகிறார்” எனவும் செந்தில்குமார் குறிப்பிட்டார்.
இதுகுறித்து முகமதா பேகத்தின் உறவினர் ஷேக் இலியாஸிடம் கேட்டபோது, “சில சொத்துகளுக்கு மட்டுமே முகமதா பேகத்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். மற்றவை போலியான முறையில் அபகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.
நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனது வீட்டின் பூட்டுகளை உடைத்து நகை, பணம், ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செந்தில்குமாரிடம் கேட்டபோது, “இது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
இதுதொடர்பாக முகமதா பேகத்திடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. “இந்த விவகாரத்தில் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்பதால் இப்போது அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பில்லை” என அவரது உறவினர் ஷேக் இலியாஸ் குறிப்பிட்டார்.
முகமதா பேகத்தின் புகார் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமாறனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறிய அவர், “விசாரணையில் கிடைக்கும் மேலதிக விவரங்களை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு