கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மடத்தின் ரூ.1,000 கோடி சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக சிலர் புகார் கூறியுள்ளனர்.
திருமணம் நடந்தாலும் தனது மனைவி கர்நாடகாவிலேயே இருப்பார், மடத்துக்குள் உரிமை கோர மாட்டார் என்கிறார், சூரியனார் கோயில் ஆதீனம்.
சூரியனார் கோயில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது ஏன்?
இந்தச் சர்ச்சை குறித்து ஆதீனத்தின் மனைவி சொல்லும் பதில் என்ன?
சூரியனார் கோயில் ஆதீனம்
தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ மடங்களில் ஒன்று சூரியனார் கோயில் ஆதீனம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள இந்த மடம், சிவாக்ர யோகி என்பவரால் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய சமஸ்தானங்களை ஆட்சி செய்த மன்னர்களும் தஞ்சை சரபோஜி மன்னர்களும், சூரியனார் கோயிலுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.
இந்த மடத்தில் பிரம்மசாரிகளும் இல்லறத்தைக் கைவிட்டு துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களும் ஆதீனங்களாக இருந்துள்ளனர். இதை ‘சிவாச்சாரியார்கள் மடம்’ எனவும் கூறுகின்றனர்.
சூரியனார் கோயில் மடத்தை நிர்வகிக்க முடியாத காரணத்தால், சிலகாலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தம்பிரான்களாக இருந்தவர்கள், சூரியனார் கோயில் மடத்தின் ஆதீனங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு சூரியனார் கோயில் ஆதீனமாக இருந்த சங்கரலிங்க தேசிக சுவாமிகள், பரிபூரணம் (மரணம்) அடைந்ததைத் தொடர்ந்து 28-வது ஆதீனமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் நியமிக்கப்பட்டார்.
கர்நாடக பெண்ணுடன் திருமணம்
இந்தநிலையில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கர்நாடகாவில் வசித்து வரும் ஹேமாஸ்ரீ என்பவரை, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.
இருவருக்கும் கர்நாடகாவில் திருமணம் நடந்தது தொடர்பான பதிவுச் சான்றிதழ், இணையதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார், சூரியனார் கோயில் ஆதீனம்.
அதில், “மடத்தின் விதிகளை மீறிப் புதிதாக நான் எதையும் செய்யவில்லை. நடந்த சம்பவங்களை மறைக்கவும் விரும்பவில்லை. நான்கு பேருக்கு தெரிந்து வெளிப்படையாகவே பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்,” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, சூரியனார் கோவில் ஆதீனத்திடம் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றையும் பெற்றுள்ளனர்.
மரபுகளை மீறினாரா ஆதீனம்?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார் சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள். (மடத்தின் சமயம், நிர்வாகப் பணிகளை கவனிப்பவர்களை ‘ஸ்ரீகார்யம்’ என்கின்றனர்)
“ஆதீனத்துக்கு இது முதல் திருமணம். ஆனால், ஹேமாஸ்ரீக்கு ஏற்கெனவே இரண்டு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். மடத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கவே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது,” என்கிறார் அவர்.
“மதுரை, திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய ஆதீனங்களில் திருமணம் ஆகாதவர்கள் தான் ஆச்சாரியர்களாக வர முடியும். ஆனால், சூரியனார் கோயில் மரபுப்படி இல்லறத்தில் இருந்தும் துறவறம் மேற்கொள்ளலாம். இதற்கு முன்பிருந்த ஆதீனம், இல்லறத்தில் இருந்து துறவறத்துக்கு வந்தவர் தான். ஆனால் துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்கக் கூடாது என்பது மரபு. இதற்கு மாறாக தற்போதைய ஆதீனம் செயல்பட்டுள்ளார்,” என்கிறார் அவர்.
மேலும், “அவர் திருமணம் செய்துள்ள ஹேமாஸ்ரீ என்பவர், கடந்த ஜனவரி மாதம் மகர சங்கராந்தி அன்று மடத்தின் பக்தையாக உள்ளே வந்தார். பிப்ரவரி மாதம் மாசி மகம் நிகழ்வில் பங்கேற்றார். மார்ச் மாதம் நாங்கள் அயோத்திக்கு சென்றபோது, அப்போது ஆதீனத்துடன் அந்தப் பெண்மணி வந்து நின்றார். ஏப்ரல் மாதம் நர்மதா புஷ்கர நிகழ்வில் பங்கேற்க வந்தார்,” என்கிறார்.
‘ரூ.1,000 கோடி சொத்துகள்’
மேலும் பேசிய ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள், ஹேமாஸ்ரீ தான் செய்து வரும் வியாபாரம் தொடர்பாக அவர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனத் தெரியவந்ததாகச் சொல்கிறார்.
“மன்னர்கள் தானமாகக் கொடுத்த மடத்தின் சொத்துகளில் பலவும் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அதை மீட்டுக் கொடுக்கும் அளவுக்குத் தனக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறி ஆதீனத்தை அவர் ஏமாற்றியுள்ளதாக அறிகிறோம்,” என்கிறார்.
தொடர்ந்து பேசிய சுவாமிநாத சுவாமிகள், “கர்நாடக மாநிலம், பிடதியில் 3 ஏக்கர் நிலத்தை மடம் அமைப்பதற்காக அந்தப் பெண்மணி கொடுத்ததால் திருமணம் செய்து கொண்டதாக ஆதீனம் கூறுகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலரும் மடத்துக்கு நிலம், உடைமைகளைப் தானமாக கொடுத்துள்ளனர். அவர்களை எல்லாம் அப்போதிருந்த ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல் இல்லை,” என்கிறார்.
“மடத்துக்குச் சேவை செய்ய வரும் பெண்களுக்கு சமய தீட்சை, சிவ தீட்சை, சந்நியாச தீட்சை எனக் கொடுப்பதில் தவறு இல்லை. திருமணம் செய்து கொள்வதை எவ்வாறு ஏற்பது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், மடத்தின் சொத்துகளாகச் சூரியனார் கோயில் கிராமம், திருமாந்துறை கிராமம், திருமங்கலக்குடி கிராமம், திருவீழிமிழலை கிராமம் ஆகியவை உள்ளன. ரூ.1,000 கோடி மதிப்புள்ள இந்தச் சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக அறிகிறோம்,” என்கிறார்.
“இந்தத் திருமணத்தின் மூலம் மடத்தின் மாண்பும் புனிதமும் கெட்டுப் போய்விட்டது. இந்தத் தகவலை இதர மடாதிபதிகளுக்கும் வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்துள்ளோம். காவல்துறையிலும் புகார் கொடுக்க உள்ளோம்,” என்கிறார்.
ஆதீனம் சொல்வது என்ன?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறவே மறுக்கிறார், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள்.
பிபிசி தமிழிடம் பேசிய ஆதீனம், “எங்களுக்கு சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாக தீட்சை, ஆச்சார்ய தீட்சை ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இதைப் பெற்று சந்நிதானமாகப் பொறுப்புக்கு வருகிறோம். இல்லறத்தில் இருந்தும் மடம் நடத்தலாம். துறவறத்தில் இருந்தும் மடம் நடத்தலாம். எனக்கு முன்பு இருந்து சந்நிதானங்கள், இல்லறத்தில் இருந்து தான் வந்துள்ளனர்,” என்கிறார்.
ஹேமாஸ்ரீ உடன் திருமணம் நடந்தது குறித்துப் பேசிய ஆதீனம், “அவருக்குத் தமிழ் தெரியாது. மடத்தின் நிர்வாகத்துக்குள் அவர் வரமாட்டார். அவருக்கு கர்நாடகாவில் தொழில்கள் உள்ளன. அவர் அங்கு தான் இருப்பார். அவருக்கும் எதிர்பார்ப்புகள் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை,” என்கிறார்.
கர்நாடகாவில் சூரியனார் கோயில் மடத்தைத் தொடங்குவதற்குத் தனக்குச் சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ கொடுத்துள்ளதாகவும் அவரை அறங்காவலராக நியமித்து, தொடர்ந்து நிர்வாகம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் பிபிசி தமிழிடம் ஆதீனம் கூறினார்.
தனக்கு முன்பிருந்த சந்நிதானத்துக்கு 102 வயதாகும் போது அவரைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல் தவித்ததாகவும் ஆதீனம் குறிப்பிட்டார்.
மடத்தின் சொத்துகளை அபகரிக்கவே திருமணம் செய்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த ஆதீனம், “தவறான குற்றச்சாட்டு. இவர்கள் கூறும் சொத்துகள் எல்லாம் ஆதீனத்தின் பெயரால் உள்ளதே தவிர, ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மக்களிடம் உள்ள நிலங்களுக்கு குத்தகையும் முறையாக வசூல் செய்யப்படவில்லை,” என்கிறார்.
“இப்போது வரை ஆறு கிராமங்கள் மட்டுமே சூரியனார் கோயில் மடத்துக்குச் சொந்தமாக உள்ளன. இவை நிலங்களாக உள்ளன. இங்கு வசிக்கும் மக்களும் அன்றாட வருவாய்க்காக வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வசூலிக்க முடியவில்லை,” என்கிறார் மகாலிங்க தேசிக சுவாமிகள்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட விஜயரகுநாத தொண்டைமான், ஆறு கிராமங்களை சூரியனார் கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளதாக கூறும் ஆதீனம், “அந்தச் சொத்துகளைத் திருவாவடுதுறை ஆதீனமும் பராமரிக்கவில்லை, நாங்களும் பராமரிக்கவில்லை. ஆனால் பட்டயம் மட்டும் உள்ளது. அதை மீட்பதற்கான வேலையும் நடந்து வருகிறது. பெரும்பான்மையான சொத்துகள், திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்,” என்கிறார்.
பக்தர்களின் காணிக்கையை வைத்து சூரியனார் கோவில் புனரமைக்கும் வேலைகளைச் செய்து வருவதாகவும் அதில் இருந்தே மடத்தின் அன்றாட செலவுகளையும் கவனித்து வருவதாகவும் கூறுகிறார் ஆதீனம்.
‘பக்தராக மட்டுமே வருவார்’
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் விசாரணை குறித்துப் பேசிய ஆதீனம், “என்னிடம் வந்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம், ‘கர்நாடகாவில் இருந்து ஹேமாஸ்ரீ நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டுக்கு பக்தராக மட்டுமே வருவார். எந்த உரிமையும் கோரப் போவதில்லை’ எனக் கூறிவிட்டேன். இந்த விவகாரத்தில் சிலர் தேவையில்லாமல் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்” என்கிறார்.
ஹேமாஸ்ரீ என்ன சொல்கிறார்?
திருமணச் சர்ச்சை குறித்து ஹேமாஸ்ரீயிடம் பிபிசி தமிழ் பேசியது.
“பா.ஜ.க வைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் ஆதீனத்தைச் சந்தித்தேன். அவரை நான் திருமணம் செய்வதற்கு முன்பு வரை அவர் ஆதீனம் என்பது தெரியாது. அவருடன் காசிக்குச் சென்றபோது, அவர் ஆதீனம் என்பதையும் சைவ மடங்களில் மிகவும் புகழ்பெற்றதாக சூரியனார் கோவில் இருப்பதையும் அறிந்தேன்,” என்கிறார்.
“நான் ஆதீனத்திடம், ‘எனக்குள்ள தொடர்புகள் மூலம் உலக அளவில் சூரியனார் கோயிலுக்கு மடங்களைத் திறக்கலாம்’ என்றேன். அதன் ஒருபகுதியாக பிடதியில் உள்ள நிலத்தில் மடம் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
“அந்த நிலத்தின் மதிப்பு ரூ.35 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது. என்னுடைய சொந்தப் பணத்தில் தான் அங்கு மடத்தைத் திறக்க உள்ளோம். இதற்கு ஆதீனம் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், சிலர் என் மீதும் ஆதீனம் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்,” என்கிறார்.
‘இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு’
மேலும் பேசிய ஹேமாஸ்ரீ, ” தமிழ் ஊடகங்களில் என்னைப் பற்றித் தவறான தகவல்கள் வெளிவந்துள்ளன. இது நானும் ஆதீனமும் சேர்ந்து எடுத்த முடிவு. இதில் மற்றவர்கள் தலையிடுவதற்கு என்ன உரிமை உள்ளது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
மடத்தின் சொத்துகளை அபகரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்த ஹேமாஸ்ரீ, “திருமணம் செய்வதற்கு முன்பு வரை என்னுடைய சொத்துகள் பற்றி ஆதீனத்துக்குத் தெரியாது. அதேபோல், அவருக்கு உள்ள சொத்துகள் பற்றியும் எனக்குத் தெரியாது. அது பொதுமக்களின் பணம். அதை நான் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் உள்ள பணமே போதுமானது,” என்கிறார்.
“தற்போது சிலர் என் தந்தையைச் சந்தித்து, ‘இந்தத் திருமணம் செல்லாது. ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறி மிரட்டியுள்ளனர். என் தந்தையை அவர்கள் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? என் முந்தைய கணவர் இறந்த பிறகு பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு ராம்நகரில் நற்பெயரில் உள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறேன்,” என்கிறார் ஹேமாஸ்ரீ.