• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு – விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கை | Central team inspects Thanjavur paddy procurement centre today Farmers main demand

Byadmin

Oct 26, 2025


தஞ்சாவூர்: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக தஞ்சாவூர் அருகே ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், சுமார் 6.50 லட்சம் ஏக்கரில்,குருவை சாகுபடி செய்யப்பட்டு, 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில், அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர்.

இந்நிலையில், லாரிகள் போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இச்சூழலில், கடந்த அக்.16ம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியதால், அவ்வப்போது மழை பெய்து, மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் தமிழக அரசு சில தினங்களுக்கு முன் அனுமதி கேட்டது.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளைக் கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன. இதில், ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் இரண்டு தொழில்நுட்ப அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி, இரண்டாவது குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் ஈரப்பதம் தொடர்பாக இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த நெல் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ஆய்வுக்கு வந்த குழுவினரிடம் விவசாயிகள், ‘ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா அறுவடையின் போது ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய குழு வருகை தந்து ஆய்வு செய்கிறது. இந்த செயல் விவசாயிகளுக்கு கண்துடைப்பாகவே உள்ளது. எனவே இப்போது ஆய்வுக்கு வந்துள்ள குழுவினர் உடனடியாக அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மாவட்டம் ராராமுத்திரகோட்டை, தெலுங்கன் குடிக்காடு, கீழ கோயில் பத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.



By admin