சென்னை: சென்னையில் தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன் (50). இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை 28-ம் தேதி பெசன்ட் சாலையில் உள்ள மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டேண்டில், ஆட்டோவை எடுப்பதற்காக அதில் ஏற முயன்றார். அப்போது ஆட்டோவுக்கு கீழே படுத்திருந்த தெருநாய் ஒன்று திடீரென முகமது நஸ்ருதீனின் முழங்கால் பகுதியில் கடித்தது.
அவர் நாயை துரத்திவிட்டு, உடனடியாக அருகில் இருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து தடுப்பூசி செலுத்திய பின் வீடு திரும்பி தனது பணிகளைக் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த செப்.12-ம் தேதி முகமது நஸ்ருதீனிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதை யடுத்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனியாக ஓர் அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போது ரேபிஸ் பாதிப்பால் தண்ணீர் குடிக்க முடியாமலும், உணவை உட்கொள்ள முடியாமலும் தொடர்ந்து அவதியுற்று வந்தார்.
பின்னர் சிகிச்சைப் பலனின்றி முகமது நஸ்ருதீன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்திய பிறகும், 40 நாட்களுக்குப் பிறகு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் ராயப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (65). இவர் தனது கணவர் ஜெயபாலனுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் தனது மகளின் பேரக் குழந்தையைப் பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பழனி (50) என்பவர் தனது நாயை கயிற்றில் கட்டாமல் அப்படியே விட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், திடீரென்று லட்சுமியின் வலது காலில் கடித்துள்ளது. இதில் காயமடைந்த லட்சுமி சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்துவிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.