0
தடை அதை உடை – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : காந்திமதி பிக்சர்ஸ்
நடிகர்கள் : மகேஷ், குணா பாபு, கணேஷ், மகாதீர் முகமது, பாக்கியம் கௌதமி, வேல் முருகன் மற்றும் பலர்.
இயக்கம் : அறிவழகன் முருகேசன்
மதிப்பீடு : 2/5
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் உள்ள சதீஷ் ( குணா பாபு) எனும் கிராமத்து இளைஞன் சென்னைக்கு வந்து தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து உண்மை சம்பவத்தை தழுவி தயாரான குறும்படத்தை காண்பிக்கிறார். அந்த குறும்படத்தை பார்த்த தயாரிப்பாளர் இதன் உருவாக்கம் திருப்தியை தரவில்லை என அதிருப்தி தெரிவிக்க.. சதீஷ் அவனுடைய நண்பர்களும் மற்றொரு வாய்ப்பை கேட்கிறார்கள்.
அதே உண்மை சம்பவம் தொடர்பான கதாபாத்திரங்களின் இன்றைய கால கட்டத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு குறும்படத்தை உருவாக்கி அதையும் அதே தயாரிப்பாளரிடம் காண்பிக்கிறார்கள். இந்த முறையும் இவர்களுக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட.. ஆத்திரமடையும் அந்த இளைஞர் கூட்டம் கதை ஒன்றை வித்தியாசமான கோணத்தில் யோசித்து, அதை படமாக்குகிறார்கள். அதனை பார்த்த தயாரிப்பாளர் இவர்களுக்கு வாய்ப்பளித்தாரா? இல்லையா? கதையின் நாயகனான சதீஷ் இயக்குநரானாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அறிவழகன் முருகேசன் ஏற்கனவே குறும்படத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர். தான் பெற்ற அனுபவத்தையும் உண்மை சம்பவத்தை தழுவியும் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறார். காட்சிப்படுத்தலில் பல போதாமைகளும், பல இல்லாமைகளும் இருந்தாலும் அவருடைய கதை சொல்லும் பாணி ரசிக்க வைக்கிறது.
திரைக்கதையில் முதல் குறும்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள்.. இரண்டாவது குறும்படத்தில் கெட்டப்புகளை மாற்றி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.
சமூக வலைதளங்கள்- மனிதர்களுக்கு இயற்கை அளித்த நிகரற்ற கொடையும், இழந்தால் மீட்கவே இயலாத நேரத்தையும் – கணிசமான அளவில் கபளீகரம் செய்கிறது என்பதை பிரச்சார தொனியில் சொல்லி இருந்தாலும் கவனிக்க வைக்கிறது.
அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களின் வியத்தகு வளர்ச்சியால் ‘எதிர்காலத்தில் இந்த சமுதாயத்தில் யூடியூபர்கள்- சப்ஸ்கிரைபர்கள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே இருப்பார்கள்’ என உரையாடலில் இடம்பெறச் செய்திருப்பது பாராட்டைப் பெறுகிறது.
தலைப்பிற்கு பொருந்தும் வகையில் கடந்த தசாப்தங்களில் அடிமைத்தளையில் சிக்கியிருந்த மக்களுக்கான கல்வி உரிமை கிடைத்ததன் பின்னணி, விடா முயற்சியின் வீரியம், கால மாற்றத்தால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், சமூக வலைதளங்களின் தாக்கத்தால் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுப்பு அரசியல்- என பல விடயங்களை முதல் படைப்பிலேயே வலிந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேஷ் – சதீஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குணா பாபு – ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
கதைக்களம் மற்றும் டெல்டா மாவட்டத்தில் பசுமையான பகுதிகள் கண்ணைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவு – இசை -பாடல்கள் -பின்னணி இசை – கலை இயக்கம்- படத்தொகுப்பு- ஆகியவை சிறிய முதலீட்டு திரைப்படம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இருந்தாலும் தற்போதைய சூழலில் சமூகத்திற்கு அவசியமாக தேவைப்படும் விடயங்களை முன்மொழிந்திருப்பதால் படக் குழுவினரை பாராட்டலாம்.
தடை அதை உடை – கடந்து செல்ல வேண்டிய எதிர்மறையான பின்னூட்டம்