0
அறிமுக இசையமைப்பாளர் சாய் சுந்தர் இசையமைத்த ‘தடை அதை உடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் ஏ. ஜே. பாலகிருஷ்ணன் – நடிகர் அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் இசை & முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தடை அதை உடை’ எனும் திரைப்படத்தில் மகேஷ், குணா பாபு, கே. எம். பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மகாதீர் முகமது, பாக்கியம் கௌதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தங்கபாண்டியன் – சோட்டா மணிகண்டன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சாய் சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
1990களில் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாகாணமான டெல்டா பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி உணர்வு பூர்வ படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அறிவழகன் முருகேசன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக் குழுவினருடன் ‘காமராஜர்’, ‘திருக்குறள்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குநராக திகழும் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் மற்றும் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள் தாஸ், தொழிலதிபர் சத்தியம் சரவணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”1990களில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஐம்பது ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த ஒருவர் – தன் வாரிசுகளின் கல்வி உரிமைக்காக போராடிய போராட்டத்தின் உண்மை சம்பவத்தை தழுவி, சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளுடன் இணைத்து, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்”என்றார்.