0
தேசிய விருது பெற்ற படைப்புகளில் பங்களிப்பு செய்து ரசிகர்களின் அன்பை சம்பாதித்திருக்கும் நடிகர் கிஷோர் கதையினை வழிநடத்தி செல்லும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ எனும் திரைப்படம் – தந்தை/மகள் இடையே உள்ள உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திரவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெல்லிசை’ எனும் திரைப்படத்தில் கிஷோர், சுபத்ரா றொபட், ஜோர்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த், மணிகண்டன், தனன்யா, ப்ரோஓக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசி இருக்கிறோம். காதல், லட்சியம், தோல்வி, வெற்றி, வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்து உணர்வுகளும், தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடைபெறும் சம்பவமாக ‘மெல்லிசை’ யில் இடம் பிடித்திருக்கிறது ” என்றார்.