சென்னை: தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறாத சாதிய மோதல்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கல்வித் துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.
2020-21-ல் தொடக்கப் பள்ளிகளில் 0.6 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2024-25-ல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுபோல உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள் ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான சாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்,
கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன.தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதல்வரும், அமைச்சரும் எப்போது விழித்துக் கொள்வார்கள்? என்று கூறப்பட்டுள்ளது.
