• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

‘தனி ஆள் இல்லை… கடல் நான்!’ – மதுரை மாநாட்டு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த விஜய் | tvk president Vijay shares selfie video taken at Madurai maanaadu

Byadmin

Aug 22, 2025


சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று (ஆக.21) நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் தான் எடுத்த செல்ஃபி வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த 2024-ம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் மூலம் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி இருந்தார். அதோடு நேரடி அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் ‘ஜனநாயகன்’ படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதில் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக களத்துக்கே சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

போலீஸ் காவலில் உயிரிழந்த குடும்பத்தினருடன் கடந்த மாதம் ஆளும் அரசுக்கு எதிராக சென்னையில் தவெக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்நிலையில், மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநாட்டில் ‘எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையில்தான் போட்டி’ என விஜய் தெரிவித்தார். அதோடு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக அரசை எதிர்த்து பேசினார்.

முன்னதாக, மதுரை மாநாட்டில் ‘ரேம்ப் வாக்’ மேற்கொண்டிருந்தார் விஜய். அப்போது அவரை நெருங்க மாநாட்டுக்கு வந்திருந்த பலரும் முயற்சித்தனர். அதேநேரத்தில் சினிமா நட்சத்திரமான விஜய்யை நேரில் பார்த்து பலரும் ஆரவாரம் செய்திருந்தனர். அதைப் பார்த்து மகிழ்ந்த விஜய் தனது போனில் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) அதை எக்ஸ் சமூக வலைதளத்தில் நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார்.

“உங்க விஜய் உங்க விஜய்

உயிரென வர்றேன் நான்

உங்க விஜய் உங்க விஜய்

எளியவன் குரல் நான்

உங்க விஜய் உங்க விஜய்

தனி ஆள் இல்ல… கடல் நான்” என அதற்கு விஜய் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



By admin