• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் | உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது

Byadmin

Apr 9, 2026


வீதி ஓட்டப் போட்டிகளில் முதன்மை வாய்ந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு என தனியான உலகளாவிய நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை போட்டி அட்டவணையை புதுப்பிக்கப் போவதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) அறிவித்துள்ளது.

2027, 2029 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து தனி உலக மரதன் சம்பியன்ஷிப் 2030 இல்   அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மரதன் ஓட்டம் மற்றும் பண்டைய ஒலிம்பிக் ஆகியவற்றின் பிறப்பிடமான ஏதென்ஸில், தனி உலக மரதன் சம்பியன்ஷிப் நடத்தப்படவுள்ளது.

இது உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் (World Championship) போட்டிகளை மறு வடிவமைக்கும் ஒரு மூலோபாய திட்டமாகும்.

இதற்கு அமைய 2031இலிருந்து உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மரதன் ஓட்டப் போட்டியோ, வேறு எந்த வீதி ஓட்டப் போட்டியோ இடம்பெறமாட்டாது.

‘மரதன் ஓட்டப் போட்டியை இன்றைய உலகளாவிய நிகழ்ச்சியாக மாற்றியவர்களுடன் மிக நெருக்கமாக நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த திட்டத்திற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது’ என உலக மெய்வல்லுநர் நிறுவனம் தெரிவித்தது.

இது தொடர்பான பூரண விபரங்கள் அடுத்துவரும் மாதங்களில் வெளியிடப்படும் என உலக மெய்வல்லுநர் நிறுவனம் மேலும் தெரிவித்தது.

இதேவேளை, உலக மெய்வல்லுநர் வீதி ஓட்டப் போட்டி சம்பியன்ஷிப்பும் தனி ஒரு நிகழ்ச்சியாக வருடாந்தம் நடத்தப்படவுள்ளது.

புதிய கட்டமைப்பின் கீழ் இந்த சம்பியன்ஷிப் போட்டி வருடந்தோறும் நடத்தப்படுவதுடன் ஆண்களும் பெண்களும் மாறி மாறி பருவகாலங்களில் பங்குபற்றுவார்கள்.

இந்த மாற்றம் 2031இல் அமுலுக்கு வரும்வரை 2027, 2029 உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்பில் மரதன் ஓட்டப் போட்டியும் வீதி ஒட்டப் போட்டியும் தொடர்ந்து நடைபெறும்.

By admin