5
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முன்னோட்டத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் ‘ஹேப்பி ராஜ்’ பட வெளியீட்டிற்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கவின், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் என பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் பேசுகையில், ” எம்முடைய குருநாதர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில், நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் இருந்து அவருடன் பயணித்து வருகிறேன்.
இப்படத்தின் கதையை ஜீ.வி. பிரகாசிடம் மட்டுமே சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இதுவரை ஏராளமான புதிய இயக்குநர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவர்களில் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என நான் உணர்ந்தேன். அவருக்காக எம்முடைய முழு திறனையும் வழங்க முடிவு செய்து உருவாக்கிய திரைப்படம் தான் ‘ஹேப்பி ராஜ்’.
இந்த திரைப்படம் ஜீ. வி. பிரகாஷ் குமாருக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளிலும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவருடைய பங்களிப்பை வழங்கி வருகிறார். இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான படைப்பு ” என்றார்.
இந்த முன்னோட்டத்தில் ‘கைதி’ படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த நடிகர் ஜார்ஜ் மரியான் சிறப்பான வேடத்தில் நடித்திருப்பதாகவும் ..அவருடைய கதாபாத்திரம் மக்களிடம் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.