• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் அக்.11-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு | Chance of heavy rain till October 11 in Tamil Nadu

Byadmin

Oct 7, 2024


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (அக். 7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 9-ம் தேதி நீலகிரி, கோவை,திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 10-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 11-ம் தேதி நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 6-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வடகுத்து, சிவகங்கை ஆகிய இடங்களில் 13 செ.மீ., நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 12 செ.மீ., சேலத்தில் 11 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஆலங்குடி ஆகியஇடங்களில் 9 செ.மீ., புதுக்கோட்டை, கடலூர் மாவட்டம் வானமாதேவி, சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணை ஆகிய இடங்களில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூர், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்,சேலம் மாவட்டம் வாழப்பாடி,புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், ஆவுடையார்கோவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.



By admin