நாமக்கல்: “பிஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிஹார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகில் இன்று நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைரும், ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி கலந்துகொண்டு பிர்சா முண்டாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியளர்களிடம் அவர் கூறியது: “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும். நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது ஒரு சுதந்திரமான அமைப்பு. அவர்கள் சட்டப்படி 14 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணியை மேற்கொண்டுள்ளனர். இதை திமுக எதிர்ப்பது தங்களின் சுய லாபத்திற்காகத்தான்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. இது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. இந்தியாவை பிரதமர் மோடி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார். இதை தமிழக இளைஞர்களும், பெண்களும் பொதுமக்களும் மிகவும் விரும்புகின்றனர். எனவே பிஹார் சட்டப்பேரவை தேர்தலைப் போல் தமிழக சட்டசபை தேர்தலிலும் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்று அவர் கூறினார்.