தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30 முதல் மே 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஏப். 30 முதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 6 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசல் தென்பாதி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., தேனி மாவட்டம் உத்தமபாளையம், மஞ்சளாறு, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.