• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in some districts

Byadmin

Jun 13, 2025


தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஓரிரு இடங்களிலும், வரும் 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும், 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 15-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 10 செ.மீ., புதுச்சேரியில் 9 செ.மீ., சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 6 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கோவை மாவட்டம் சின்கோனா, புதுச்சேரி பத்துக்கண்ணு, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், விழுப்புரம் மாவட்டம் வானூர், சென்னை மணலி புதுநகர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin