சென்னை: தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் லாரிகளிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை திமுகவினர் வசூல் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜக சார்பில் இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியின் குறைபாடுகளை, சுட்டிக்காட்டி அதில் பேச இருக்கிறேன். தஞ்சாவூரில் சேதமடைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டுவிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து கொண்டு இருப்பது நல்ல ஒரு ஆட்சியாக இருந்தால், உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லை, கொள்முதல் செய்து, அந்தந்த உணவுக் கிடங்குகளுக்கு அனுப்பி சேதமடையாமல் பாதுகாத்திருக்க வேண்டும்.
ஆனால் அதில் காலதாமதம் ஏற்படுவதோடு, ஒரு மூடைக்கு ரூ.40 கமிஷன் கேட்பதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே நெல் கொள்முதலை, அரசு சரியான முறையில் கையாளவில்லை என்பது எங்களது குற்றச்சாட்டு. கல்குவாரிகளில் நடை பெறும் முறைகேடுகள், திரு நெல்வேலி மாவட்டத்தில் மட் டுமல்ல, தமிழகம் முழுவதுமே நடந்து கொண்டு இருப்பதாகவும், ஆளுங்கட்சியினர்தான் அனைத்து கல்குவாரிகளிலும் ஒரு லாரிக்கு குறிப்பிட்ட தொகையை பெறுவதாகவும், குற்றச்சாட்டு உள்ளது.
அரசு அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில், அதிகாரிகளை நாகரீகமாக நடத்த வேண்டும். அதிகாரிகளை மதிக்காத கூட்டணி தான் திமுக கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.