கோடை மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வெப்பம் தணிந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் வரும் 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று வழக்கமான அளவில் இருக்கும். 7, 8, 9-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 80 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், மே.மாத்தூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 9 செ.மீ., கடலூர் மாவட்டம் வேப்பூர், குப்பநத்தம், பரங்கிப்பேட்டை, புள்ளம்பாடி, சேத்தியாத்தோப்பு, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோடை மழையால் தணிந்த வெப்பம்: தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. எனினும், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்தது. இதனால் அன்று இரவே வெப்பம் தணிந்து ரம்மியமான சூழல் நிலவியது.
இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக வேலூரில் 101 டிகிரி, தொண்டி, மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி என 3 இடங்களில் மட்டுமே 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.