• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Tamil Nadu have Heavy Rain Chances From Tomorrow

Byadmin

Oct 13, 2025


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.14), நாளை மறுதினம் (அக்.15) ஒருசில இடங்களிலும், அக்.16 முதல் அக்.19-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (அக்.14-ம்) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், அக்.15-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும்.

அக்.16-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அக்.17-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், அக்.18ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்,

அக்.19-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.14-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, தென்காசி, வேலூர் மாவட்டம் அம்முண்டியில் தலா 8 செ.மீ மழை, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் தலா 7 செ.மீ மழை, வேலூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin