• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | 89 people injured in firecracker explosion in Tamil Nadu: Minister M. Subramanian explains

Byadmin

Oct 20, 2025


சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி, இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தீ விபத்து சிகிச்சை வார்டு ஆய்வு – திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து செல்வது என்பது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறோம். தமிழக முதல்வர் ஒவ்வொரு தீபாவளி முன்பாகவும் பாதுகாப்பற்ற முறைகளில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசின் பல்வேறு துறைகளின் எடுத்துரைக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி யிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை, தீயணைப்புத் துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறைகள் இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளி அன்று சிறப்பு சிகிச்சை வார்டுகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் 36ல் தலா 20 படுக்கைகள் வீதம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான தீக்காய பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த வாரம் இம்மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய வெண்டிலேட்டர் கருவியுடன் கூடிய வார்டுகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று தனித்தனி வார்டுகள் தொடங்கப்பட்டது. நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாடு ழுழுவதும் தொடங்கி பட்டாசு வெடித்ததினால் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89 பேர், இதில் 41 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லம் திரும்பி இருக்கிறார்கள். 48 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 48 பேரில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 8 பேர், மிகச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் 32 பேர், அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டு ஒரு மகளிர் சகோதரி ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 7 பேரில் ஒரு குழந்தைக்கு மட்டும் 7% அளவிற்கு தீக்காய பாதிப்பும், ஒரு குழந்தைக்கு 15% தீக்காய பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. யாருக்கும் உயிர் பாதிப்பு என்கின்ற அளவில் பிரச்சினை இல்லை. மிகப் பெரிய அளவில் காயங்கள் இல்லாமல் தீபாவளி கடந்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் மீதமுள்ள நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது.

இன்னமும் பாதுகாப்பான தீபாவளி மக்கள் கொண்டாட வேண்டும் என்கின்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்து கின்ற வகையிலும், தீபாவளி நாளில் தங்களுடைய குடும்பத்தை விட்டு, அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக தீக்காய சிகிச்சை வார்டுகளில் பணியாற்றுகின்ற மகத்தான மருத்துவச் சேவை ஆற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை பாராட்டுகின்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் நான் நேரில் சென்று அவர்களுடன் தேநீர் அருந்தி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது.

மருத்துவர்களும் தீக்காய சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் நல்ல முறையில் வழங்கி வருகிறார்கள். மேலும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்களுடன் இருந்து வெடிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிப்பதுதான் பாதுகாப்பானது, நைலன் போன்ற ஆடைகளை அணிந்து பட்டாசு வெடித்தால் தீப்பட்டவுடன் விரைந்து ஆடைகள் பற்றிக் கொள்ளும் என்பதால் அந்த ஆடைகளை தவிர்க்க வேண்டும், பட்டாசு வெடிக்கும்போது செருப்புகள் அணிய வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்,

காற்றோட்டமான பகுதிகளில் பட்டாசு வெடிப்பது நல்லது, இடைவெளி விட்டு பட்டாசு வெடிக்க வேண்டும், ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது சாய்வு நிலையில் வெடிக்க கூடாது, நேர்நிலைகளில் வைத்து தான் வெடிக்க வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு தீபாவளி நாளிலும் பட்டாசு வெடிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்கின்ற வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், “ஏற்கெனவே கடந்த வாரம் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை போன்ற சேவை துறைகளுடன் மாநில, மாவட்ட அளவிலான அலுவலர்கள், 10-க்கும் மேற்பட்ட துறை செயலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கங்கள் எடுத்து கூறி ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த சேவைத் துறை அலுவலர்கள் கூட்டங்கள் நடத்தி பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கடந்த காலங்களில் எங்கெயெல்லாம் மழை பாதிப்புகள் உள்ளாக்கியதோ அந்த பகுதிகளில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் தேங்குவது என்பது இருந்தது. அதற்கு காரணம் அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் அங்கு ஏற்கெனவே இருந்த மழைநீர் வடிகால் வாரிய பணிகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் மழைநீர் புகுவது என்பது இருந்தது, தற்போது அப்பணிகள் சரி செய்யப்பட்டு விட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை, ஏரல் போன்ற அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. அந்த வகையில் இந்த ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சிறிய பாதிப்பும் போக்கப்பட்டிருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் எங்கேயெல்லாம் மழைநீர் தேங்கியதோ அங்கேயெல்லாம் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், பொதுப்பணித் துறை நிர்வாகமும் அந்த பாதிப்புகளை சரி செய்து வருகிறது” என்று கூறினார்.

இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கவிதா, மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்“ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin