சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று (மார்ச் 11) காலை தொட்டே பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்றே தணிந்துள்ளது.
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றுகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நாளையும் (மார்ச் 12) பரவலாக மழைப் பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் வேலூரில் திடீர் மழைப் பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதை ஒட்டியுள்ள உட்புற மாவட்டங்களிலும் மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த மழையால் வெப்பம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த இரு தினங்களுக்குப் பின்னர் மீண்டும் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.