• Tue. Mar 18th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி அரசு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் | ramadoss aboyt tamil languages in schools

Byadmin

Mar 18, 2025


சென்னை: தமிழை வளர்க்க பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத் தேவையில்லை. மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழை எட்டாம் வகுப்பு வரையிலாவது பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 1999-ல் சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்றத் தவறிய அன்றைய திமுக அரசு, அதற்கு பதிலாக 5-ம் வகுப்பு வரை மட்டும் தமிழை பயிற்றுமொழியாக்கி அரசாணை பிறப்பித்தது.

ஆனால், அடுத்த 5 மாதங்களில் அந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு 25 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய திமுக அரசு 2006-ல் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தி தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ்த் துரோகம் தொடர்கிறது.

ஆக்கப்பூர்வ நடவடிக்கையே தீர்வு: மொழி விஷயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டுவது அரசியல்; ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தான் தீர்வு என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.



By admin