• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

“தமிழகத்தில் பாஜகவுக்கு ‘நோ என்ட்ரி’தான்!” – திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | no entry for bjp in tn says cm mk stalin in dmk party event

Byadmin

Sep 17, 2025


கரூர்: “அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ என்ட்ரிதான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் இங்கே பாஜகவுக்கு நோ என்ட்ரிதான்” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “2019-ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல; எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026 தேர்தலிலும் நிச்சயம் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்தக் கொள்கை என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அது, காவிக் கொள்கை. இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்தக் கொள்கைக்கு எதிராக திராவிட இயக்கம் போராடிக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கு அந்தக் கொள்கையின் அரசியல் முகம், பாஜக. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுடன் நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசியிருக்கிறார்? ‘கடந்த அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜகதான்’ என்று உண்மையைப் பேசியிருக்கிறார். அந்தக் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய, திமுகதான் காரணம் என்று நம் மீது வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான், தொடர்ந்து நமக்கு இவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து பயந்து முடங்கிவிடுவோம் என்று நினைத்தார்கள்.

திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம். 75 ஆண்டுகால ஹிஸ்டரி இருக்கிறது நமக்கு. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே, “திமுகவை அழிப்போம் – ஒழிப்போம்” என்று சொன்னார்கள். இப்போதும், சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே… “திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று” என்று. என்ன மாற்றப் போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப் போகிறார்களா?

நம்முடைய கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா? மாற்றம்… மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்… மறைந்து போனார்கள்… ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை. இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ். நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது” என்று கூறினார்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, எவ்வளவோ நெருக்கடியில் வந்தோம். ஒரு பக்கம் நிதிப் பற்றாக்குறை, இன்னொரு பக்கம், கரோனா பெருந்தொற்று, இதையெல்லாம் மீறி, நான்கரை ஆண்டுகளில் இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு, ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் ஒரே மாநிலம் எது என்று கேட்டால், ‘தமிழ்நாடு’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் அளவுக்கு, முதன்மை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம்!

இதனால்தான், நம்முடைய திராவிட மாடல் அரசைப் பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். அவர்களின் கண்ணீர்… ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதையும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தெம்போ, திராணியோ இல்லாமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். பாஜக தன்னுடன் இருக்கிறது என்று இப்போதும் வாய்த் துடுக்கோடு பேசி வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசிக்கொண்டு இருக்கிறார். கொள்கையில்லாமல் தொடைநடுங்கும் பழனிசாமியின் தரத்தை மக்களே எடை போட்டுக்கொள்வார்கள் என்று நானும் விட்டுவிட்டேன். ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அடகு வைத்திருக்கிறார்.

‘திராவிடம் என்றால் என்ன?’ என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்குத் தெரியாது என்று சொன்ன அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது தங்களின் கொள்கை, ‘அண்ணாயிஸம்’ என்று சொன்னார்கள். அதை இப்போது பழனிசாமி ‘அடிமையிஸம்’ என்று மாற்றி, ‘அமித் ஷாவே சரணம்’ என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார்.

‘முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு?’ என்று கேட்பார்கள். அதைப்போல நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து ‘காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?’ என்று கேட்கிறார்கள். இதில் அவரின் தரம்தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா?

ஆனால், மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. அதுவும், வெறும் சொல்லால் அல்ல; செயல்களாலும் திட்டங்களாலும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமல்ல, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேராக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்.

தொகுதி மறுவரையறை என்று சொன்னவுடனேயே, அதை எதிர்த்து நிற்கிறோம். கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால், சட்டரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம். முக்கியமாக, மாநிலங்கள்தான் வலிமையான நாட்டுக்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, மத்திய அரசு இல்லை; ஒன்றிய அரசு என்று அழுத்திச் சொல்கிறோம். இப்படி, போராடிப் போராடித் தமிழர்களை, தமிழ்நாட்டை தலை நிமிர்த்துகிறோம்!

இப்படி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம். தனிநபர்கள் தோன்றுவார்கள், மறைவார்கள்; கட்சிகள் வரும் போகும்; ஆனால், தமிழ்நாட்டின் தனிப்பெருமை நிரந்தரமானது. தமிழ்மொழியின் சீரிளமை நிரந்தரமானது. நம்முடைய மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது. இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது.

டெல்லி நம் மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? ஒன்றா, இரண்டா..? இந்தி மொழியைத் திணிக்கிறார்கள். நம் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள். கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையையே பறிக்கிறார்கள்.

ஆனால், அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ என்ட்ரிதான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் இங்கே பாஜகவுக்கு நோ என்ட்ரிதான். ஏன் என்றால், இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு. மூன்று முறை ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்களுடைய மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே… இன்னுமா எங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை?

இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த முப்பெரும் விழாவை டி.வி.யில், சோஷியல் மீடியாவில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்கிறேன்… தலைமுறை தலைமுறையாக நாம் போராடி, எத்தனையோ பேர் உயிரையே தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமதிக்கலாமா?

பாஜகவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கெனவே, காஷ்மீரில் அதற்கு ட்ரெய்லர் பார்த்துவிட்டார்கள். எப்படி, இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்று ஒரு நிலை உருவானபோது, தமிழ்நாடு போராடி, மொழிப்போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோன்று இப்போது ஓர் உரிமைப் போரை நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.

இதை நாம் செய்யவில்லை என்றால் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? இதற்குப் போராடவில்லை என்றால் வேறு எதற்குப் போராடுவது? இதுதான் முக்கியம். இந்தப் போராட்டத்தில் முன்கள வீரனாக உங்களுடன் 23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயிலுக்குச் சென்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்.

எட்டுக் கோடித் தமிழ் மக்களின் ஆற்றலும் ஆதரவும் நமக்குப் பக்கபலமாக இருக்கிறது. இதே உறுதியுடன் போராடுவோம். இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கான போராட்டமோ, முதலமைச்சர் என்ற பொறுப்புக்கான போராட்டமோ, ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டமோ அல்ல. இது தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்குத் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



By admin