• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்கக் கோரி மே 23-ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் | lorry owners strike in tn on may 23

Byadmin

May 14, 2025


நாமக்கல்: தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி வரும் 23-ம் தேதி மாநில அளவில் மணல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உடனடியாக அரசு மணல் குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலையை யூனிட்டுக்கு ரூ.2,000 வரை உயர்த்தி உள்ளனர். அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அமைச்சர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஆனால், மணல் லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசமறுக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அனைத்து கல்குவாரி, கிரஷர்களை அரசுடைமையாக்கி, ஆன்லைன் மூலம், ஜல்லி உள்ளிட்ட வற்றை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23-ம் தேதி மாநில அளவில் லாரிகளை இயக்காமல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன்பிறகு, தொடர் காத்திருப்புப் போராட்டத்தையும் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு கட்டிடத் தொழில் சார்ந்த அனைத்து சங்கங்களிடம் ஆதரவு கோரி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin