சென்னை: கோடைக்காலம் தொடங்கிய சில நாட்களிலேயே தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதியன்று தினசரி மின்தேவை மிக அதிகபட்ச அளவாக 40.62 கோடி யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கடை, வீடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும், ஒரு நாள், அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின்நுகர்வு எனப்படுகிறது. இது தினசரி சராசரியாக 30 கோடி யூனிட்டுகளாக உள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி தினசரி மின்நுகர்வு 45.43 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைக்காலம் தற்போது தொடங்கி ஒருசில நாட்கள் ஆகிறது. அத்துடன், பள்ளி, கல்லூரிகளில் இறுதித் தேர்வு நடப்பதாலும் வீடுகளில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
இத்தகைய காரணங்களால் கடந்த 7-ம் தேதியன்று தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 40.62 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதுவே நடப்பாண்டில் இதுவரையிலான மின்நுகர்வில் அதிகபட்ச அளவாகும். மின்நுகர்வுக்கு ஏற்ப மின்னுற்பத்தி மற்றும் மின்கொள்முதல் செய்யப்பட்டதால் மின்தேவை எளிதாக பூர்த்தி செய்யப்பட்டது. வரும் நாட்களில் தினசரி மின்தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.