• Wed. Feb 5th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் 10 லட்சம்+ மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல் | 10 lakh+ metric tons of paddy procured in Tamil Nadu: Minister Sakkarapani

Byadmin

Feb 5, 2025


சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக செப்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காமலேயே அரசு வழங்கும் தமிழ்நாடு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450 என்ற விலையிலும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2405 என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

01.09.2024 முதல் 04.02.2025 வரை, தமிழகம் முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்படுத்தி, 1,44,248 விவசாயிகளிடமிருந்து 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2,247.52 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 4.2.2024 வரை 7,42,335 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 4.2.2025 வரை 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,99,248 மெட்ரிக் டன் அதிகமாகும். நெல் விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடைய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



By admin