• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Deep depression in Bay of Bengal strengthens Cyclone Warning Cage No 1 raised

Byadmin

Oct 25, 2025


சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அக்டோபர் 27 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், புயலாக வலுப்பெற்ற பின்னர் அது ஆந்திர மாநிலத்தை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்படும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிக்கும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது.

இன்று கனமழை வாய்ப்பு: இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 27-ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 28-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



By admin