சென்னை: தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படை, நிர்வாக வசதி உட்பட பல்வேறு காரணங்களுக்காக போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 59 டிஎஸ்பி-க்கள் (காவல் துணை கண்காணிப்பாளர்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்கும், மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமையகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு தலைமையக டிஎஸ்பி பூசை துரை, டிஜிபி அலுவலகத்தில் உள்ள சமூக ஊடக கண்காணிப்பு பிரிவுக்கும், மாநில சைபர் க்ரைம், கமாண்ட் மையத்தின் டிஎஸ்பியாக பணியாற்றிய இலக்கியா, வேலூர் போதைப்பொருள் புலனாய்வு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தின் டிஎஸ்பி குமார் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.