பட மூலாதாரம், Getty Images
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
”கடன் வாங்காதே என்று நம்மை பார்த்து சொல்கிறார்கள் அவர்கள் காலத்திலும் கடன்தான் வாங்கினார்கள். கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்து விலகுகிறபோது ரூபாய் 28 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அவர்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்தி 2006-ஆம் ஆண்டில் ரூ.56,000 கோடி கடன் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்ந்து வருகிறது.”
2011 பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, தமிழக சட்டப்பேரவையில் அன்றைய நிதியமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது பேசிய வார்த்தைகள் இவை.
அதே திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி 18 ஆம் தேதியன்று தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 2027 மார்ச் 31 அன்று தமிழக அரசின் கடனாக மதிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.10.71 லட்சம் கோடி. இடையிலுள்ள 15 ஆண்டுகளில் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் மொத்தக் கடன் தொகையாகக் குறிப்பிடப்பட்ட தொகை ரூ.5.78 லட்சம் கோடி.
”கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. திமுக அரசின் மிகப்பெரிய சாதனை கடன் வாங்கியதுதான்” என்று கடந்த சில மாதங்களாக திமுக அரசின் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது பரப்புரையிலும் இதுகுறித்து அதிகமாகப் பேசி வருகிறார்.
கடந்த வாரத்தில் “தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடி – ஒரு விரிவான வெள்ளை அறிக்கை” என்ற ஆவணத்தை பாஜக வெளியிட்டது. மொத்தம் 65 பக்கங்கள் இருந்த அந்த ஆவணத்தில் கோவிட் பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்துப் பார்த்தால், தற்போதைய திமுக அரசை விட முந்தைய அதிமுக அரசு கடன் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டது என்ற உண்மையை ஒப்புக்கொள்வது அவசியமென்று கூறப்பட்டுள்ளது.
இதை வெளியிட்ட பியூஷ் கோயல், சில புள்ளி விபரங்களையும் குறிப்பிட்டு ”ஜிஎஸ்டி இழப்பீடாகப் பெறப்பட்ட நிதியும், மாநில அரசு வாங்கிய கடன்களும் எங்கே சென்றன” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேநேரத்தில் மாநிலத்தின் கடன்-GSDP (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) விகிதம், நிதி ஆணையம் நிர்ணயித்துள்ள உச்ச வரம்பை விட (28.7 சதவீதம்) சற்று குறைவாக (26.4 சதவீதம்) இருப்பதாகவும் அந்த ஆவணம் கூறியிருந்தது.
வருமானம் ஈட்டாத, கடனை வாங்கிச் செலவு செய்யும் அரசாக திமுக அரசு இருப்பதாக பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துப் பேசியிருந்தார். அதிமுக, பாஜக எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, திமுகவுடன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும், ”உத்தரப்பிரதேச மாநிலத்தைவிட தமிழகத்தின் கடன் நிலைமை மோசமாகியுள்ளது” என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
ஆக இந்தத் தேர்தலில் மாநில அரசின் கடன் தொகை பேசுபொருளாகியுள்ளது.

எந்த ஆட்சியின் முடிவில் எவ்வளவு இருந்தது தமிழக அரசின் கடன்?
2010 பிப்ரவரியில் அப்போதிருந்த நிதியமைச்சர் அன்பழகன், திமுக அரசின் சார்பில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, தமிழக அரசின் கடன் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து வருவதாகப் பேசியிருந்தார்.
முந்தைய திமுக ஆட்சியில் (1996–2001), விட்டுப்போன ரூ.28 ஆயிரம் கோடி கடனை ரூ.56 ஆயிரம் கோடியாக உயர்த்தியிருந்தார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். (ஆனால் சட்டப்பேரவை ஆவணப்படி 2006 மார்ச் 31 தேதியின்படி, மாநில அரசின் நிலுவைக் கடன் – வருங்கால வைப்பு நிதி போன்ற பொறுப்புகள் உட்பட ரூ. 57,457 கோடி). அதுவே ஐந்தாண்டில் ஒரு லட்சம் கோடியானதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்பின் 2011–2016 இடையிலான அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், 2016 பிப்ரவரி 16 அன்று இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது 2016-2017 நிதியாண்டு கடனெடுப்பு ரூ.40,529 கோடிகளாக இருக்கும் என மதிப்பிட்டு, 31.03.2017 நிலவரப்படி மொத்த நிலுவைக் கடன் ரூ.2,47,031 கோடிகளாக இருக்குமென குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அந்த கடன்தொகை 19.62 சதவீதம் மட்டுமே.
மீண்டும் 2016 ஆம் ஆண்டில் அதிமுக வென்றது. ஜெயலலிதா மறைந்தபின்பு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக நான்கரை ஆண்டுகள் இருந்து ஆட்சியை நிறைவு செய்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பிப்ரவரி 23 அன்று தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் கடன் சுமையைக் காரணம் காட்டி, அந்த நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, திமுக அன்று வெளிநடப்பு செய்தது.
அதுபற்றி விளக்கிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ”கடன் வாங்கி வாங்கி, தமிழ்நாட்டின் கடன் தொகை 5.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் வாங்கி, மக்களுக்கு நன்மை செய்யவில்லை. டெண்டர் விட்டு பினாமிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.” என்று பேசியிருந்தார்.
சட்டப்பேரவை 2021–2022 இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆவணங்களின்படி, அந்த நிதியாண்டில் ரூ.84,686.75 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும். அதையும் சேர்த்து 2022 மார்ச் 31 தேதியில், தமிழக அரசின் கடன் ரூ.5,70,189.29 கோடியாக இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.
கடன்களைப் பெறுதல் மற்றும் திருப்பிச்செலுத்துதல் குறித்த மதிப்பீடுகள், இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த நிதிநிலை அறிக்கை, 2020-21 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி (GST) இழப்பீட்டுப் பற்றாக்குறையை மத்திய அரசு ஈடு கட்டிய பின்பு, நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.5,70,189.29 கோடியாக இருக்குமென்று குறிப்பிட்டிருந்தது.
அந்த கடன் தொகை 2021-22 ஆம் ஆண்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 26.69 சதவீதம் என்று குறிப்பிட்ட நிதிநிலை அறிக்கை, அது 2022-23 ஆம் ஆண்டில் 27.44 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 27.50 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
அந்த சதவீதங்கள் 15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் முழுமையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டது அறிக்கை.
பட மூலாதாரம், Getty Images
அதன்பின்பு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதலில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல்ராஜன் பொறுப்பேற்று, திமுக அரசின் முதல் 2 ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.
அதன்பின்பு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதியன்று அவர் திமுக அரசின் சார்பில் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதில், 2026 – 2027 ஆம் ஆண்டில் 1,79,809.65 கோடி கடன் வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ரூ.60413.42 கோடி மதிப்பிலான பொதுக்கடனை அரசு திருப்பிச் செலுத்தும் என்றும் கூறிய நிதிநிலை அறிக்கை, 2027 மார்ச் 31 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. இது 2026-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 26.35 சதவீதமாகும்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப்பணிக்கான மத்திய அரசின் நிதிப்பங்களிப்பைக் கணக்கிட்டு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன்தொகை, 2027-28 ஆம் ஆண்டில் 25.80 சதவீதமாகவும், 2028-29 ஆம் ஆண்டில் 25.43 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மொத்தக்கடன் தொகை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2022-23 ஆம் ஆண்டில் 27.44 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 27.50 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டதை விட இவ்விரு ஆண்டுகளின் சதவீதம் குறைவாகும்.
பட மூலாதாரம், Getty Images
வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகள் கடன் வாங்குகின்றனவா?
தமிழக சட்டப்பேரவை ஆவணங்களின்படி, 1996–2001 திமுக ஆட்சியின் முடிவில் ரூ.28 ஆயிரம் கோடியாக இருந்த கடன், 2006 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் இறுதியில் ரூ.57.45 ஆயிரம் கோடியாக உயர்ந்து, 2006–2011 திமுக ஆட்சியின் கடைசியில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.
கடந்த 2016 அதிமுக ஆட்சி நிறைவு பெறும்போது, 2017 மார்ச் 31 அன்று ரூ.2,52,431 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்ட கடன், 2021 அதிமுக ஆட்சி முடியும்போது, ரூ.5.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது.
அந்த தொகைதான், தற்போதைய திமுக ஆட்சியின் நிறைவில், 2027 மார்ச் 31 அன்று ரூ.10.71 கோடியாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. ஆக எந்தக் கட்சியின் ஆட்சி இருந்தாலும், மாறினாலும் அல்லது தொடர்ந்தாலும் ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் தமிழக அரசின் கடன் தொகை, இரட்டிப்பாகி இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் விளக்கிய பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ”அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின்படி, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு நிதி ஆணையத்தை மத்திய அரசு அமைக்கிறது. அதுவே மாநில அரசின் உரிமையில் கை வைப்பதுதான். அதன் விளைவு என்னவென்றால் மாநில அரசுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மாநில அரசுகள் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.” என்றார்.
”மாநில அரசுகளுக்கு வரி வருவாய் குறைவு. வருமான வரி உள்ளிட்ட பெருமளவு வரி வருவாய் மத்திய அரசுக்கே செல்கிறது. அரசியல் சாசனப்படி அந்த நிதி மாநில அரசுகளுக்குப் பகிரப்பட வேண்டும். சில வரியினங்கள், இந்த பகிர்வுக்குள் வராது. சமீபகாலமாக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடிஷனல் சர்சார்ஜ், செஸ் போன்ற வரியினங்களின் வருவாயை மத்திய அரசு அதிகமாக எடுத்துக் கொள்கிறது.” என்றார் வெங்கடேஷ் ஆத்ரேயா.
முன்பு 10 சதவீதமாக இருந்த இந்த வரி வருவாய், கடந்த பத்தாண்டுகளில் 20 சதவீதமாக உயர்ந்து, தற்போது கொஞ்சம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஜிஎஸ்டி வந்தபின்பு, சரக்குகளின் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு அந்நியமாகிவிட்டது. பெட்ரோல், டீசல், புகையிலை மற்றும் மதுபானங்கள் ஆகிய நான்கைத் தவிர வேறு எதற்கும் மாநில அரசால் வரி விதிக்க முடியாது என்கிறார்.

மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான காரணத்தை வேறு விதமாக விளக்கும் பொருளாதார ஆலோசகரும், ஆடிட்டருமான ஜி.கார்த்திகேயன், ”ஒரு மாநில அரசு கடன் வாங்குவது சரியா, தவறா என்று கேட்டால், அது தவிர்க்கவே முடியாத ஒன்று என்பதுதான் பதில். ஒரு நிறுவனத்துக்கு முதலீடு தவிர, வட்டிக்குக் கடன் வாங்கி அதிக லாபத்துக்குத் தொழில் செய்யும்போதுதான் தொழில், வணிகத்தை மேம்படுத்த முடியும். இதுதான் நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பொருந்தும்.” என்றார்.
”உலகத்தின் சிறந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவும் அதிக கடனை வாங்குகிறது. அதிகக் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அதனால் ஓர் அரசின் கடன் என்பது, அபிவிருத்தி, கட்டமைப்பு, கல்வி மேம்பாடு என பலவற்றுக்காகவும் வாங்குவது என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. ஆனால் வாங்கிய கடன் நல்ல கடனா, மோசமான கடனா என்பதுதான் கேள்விக்குரிய ஒன்று.” என்றார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.
ஒரு மாநில அரசின் கடன் தொகையை எப்படி மதிப்பிட வேண்டுமென்பதை விளக்கும் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ”இதை தொகையை வைத்துப் பார்த்தால் பெரிதாகத் தோன்றும். ஓர் அரசு வாங்கும் கடன் தொகை, ஜிஎஸ்டிபி எனப்படும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் வரை இருக்கலாம். ஆனால் தமிழக அரசின் கடன் தொகை அதற்குள்தான் இருக்கிறது. இந்த சதவீதம், முந்தைய அரசில் எவ்வளவு இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்ற கோணத்தில்தான் இந்த கடன் தொகையைப் பார்க்கவேண்டும்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அப்படிப் பார்த்தால் இப்போது தமிழக அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மிகவும் நன்றாகவே வளர்ந்துள்ளது என்று கூறும் வெங்கடேஷ் ஆத்ரேயா, ”தமிழக அரசு ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை.” என்கிறார்.
ஆனால் திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் வாங்கப்பட்ட கடன் பயன்படுத்தப்பட்ட விதத்தில் வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார் ஆடிட்டர் கார்த்திகேயன்.
”அதிமுக ஆட்சியின்போது, மின் உற்பத்திக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும், ஜிஎஸ்டி அறிமுகத்தால் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்டவும், கோவிட் பெருந்தொற்றைச் சமாளிக்கவும் கடன் வாங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியின்போது நலத்திட்டங்களுக்காக குறிப்பாக இலவசத் திட்டங்களுக்காக நிறைய நிதி செலவிடப்பட்டுள்ளது.” என்று பிபிசியிடம் விளக்கினார் அவர்.
கடந்த நிதியாண்டில் வட்டியாக மட்டுமே தமிழக அரசு ரூ.63634 கோடி செலுத்தியுள்ளதாகக் கூறும் ஆடிட்டர் கார்த்திகேயன், இது முந்தைய அதிமுக அரசு வாங்கிய கடனுக்கும் சேர்த்தே செலுத்தப்படுகிறது என்றார்.
கடன் வாங்கி கட்டமைப்பை மேம்படுத்துவது, கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்குச் செலவழிப்பது ஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உண்மைதான் என்று கூறும் அவர், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவும், கடனைச் செலுத்த கடன் வாங்குவதையும் மோசமான கடன் என்றுதான் கூறவேண்டுமென்கிறார்.
ஆனால் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், மாநில அரசுகளுக்கு 8 சதவீதம் அளவில் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்த அதே மத்திய அரசுதான், கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு 20 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
”மாநில அரசுகளுக்கான வரி வருவாய் குறையும் அதேநேரத்தில் எந்தவொரு பாதிப்புக்கும் மாநில அரசின் மீதே பழி போடப்படுகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு தரவில்லை என்று மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசு, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளுக்கு சரியாக அதிகாரம், நிதிப்பங்கீடு செய்யவில்லை. இதில் கேரளா சிறப்பான முன்மாதிரியாக, உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம், நிதிப்பகிர்வை அளித்துள்ளது.” என்றார் அவர்.
நிதிநிலைமையா, மக்களின் வாழ்க்கைத்தரமா?
பட மூலாதாரம், Palanivel Thiaga Rajan/Facebook
தமிழ்நாடு ஆரம்பகாலத்திலிருந்தே தொழில் வளர்ச்சி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் டாப் 3 மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருவதாகக் கூறும் ஆடிட்டர் கார்த்திகேயன், தற்போது கடனிலும் டாப் 3 மாநிலமாகியுள்ளது என்றார்.
இலவசத் திட்டங்கள் எந்தளவுக்கு தொலைநோக்கான பலனைத் தருகின்றன, அவை மக்களின் மனநிலையை எப்படி மாற்றுகின்றன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்கிறார் அவர்.
”14வது நிதி ஆணையத்தில் மத்திய வரிகளிலிருந்து 41 சதவீதம் பங்களிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 30 சதவீதம்தான் வந்துள்ளது. இதுதான் கடன் வாங்குவதற்கான காரணம் என்கிறார்கள். கடன் வாங்குவது தவிர்க்க இயலாதது. அதை எதற்காக வாங்குகிறோம், எப்படிச் செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். 15வது நிதி ஆணையத்தில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 30 லிருந்து 33 சதவீதம் வரை கடன் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கும்போது தமிழக அரசின் கடன் 26.40 சதவீதம்தான் கடன் அளவு இருக்கிறது.” என்றார ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

ஒரு மாநில அரசின் கடன் தொகையை எண்களில் பார்ப்பது கூடாது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்று பிபிசி தமிழ் நடத்திய ‘மகளிர் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஐடி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விளக்கியிருந்தார்.
”அதேபோன்று வருவாயில் எத்தனை சதவீதம் வட்டியாகச் செலுத்துகிறோம் என்பதும் கவனிக்கப்படவேண்டும். அப்படிப்பார்க்கும்போது, 2003–2014 வரையிலான 12 ஆண்டுகளில் ஜிடிஎஸ்பியில் 26–27 சதவீதமாக இருந்த கடன், நாங்கள் வந்தபின்பு 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதேபோன்று ஒரு ரூபாயில் 22 பைசா வட்டியாகச் சென்ற தொகை 11 பைசாவாகக் குறைக்கப்பட்டது. இதற்கு சிறப்பான நிதி மேலாண்மையே காரணம். இதனால் கட்டமைப்பு, உற்பத்தி அதிகரிக்கும். அதனால் பொருளாதாரம் வளரும்.” என்றார் பழனிவேல் தியாகராஜன்.
எது சிறந்த மாநிலம் என்ற தலைப்பில் ‘எகானமிஸ்ட்’ பத்திரிக்கை எழுதிய கட்டுரை குறித்து விளக்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ”நம்மை விட நிதி நிலைமையை கணக்கிடுவதில், எரிசக்தி உற்பத்தியில், சாலை, அதிக துறைமுகங்கள் என கட்டமைப்பை மேம்படுத்துவதில் குஜராத் முன்னிலையில் உள்ளது. ஆனால் மக்கள் வாழ்க்கைத் தரத்தை கணக்கிடுகையில், எத்தனை பேருக்கு ஒரு மருத்துவமனை, எத்தனை பேர் பட்டதாரிகள் என்று பார்த்தால் தமிழகமே சிறப்பாகவுள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இங்கே 2 சதவீதம் பேர். அங்கே 12 சதவீதம் பேர். அந்த வகையில் தமிழ்நாடுதான் பெஸ்ட் மாநிலம் என்று எழுதியுள்ளது. அதனால் நிதி நிலைமையை சரி செய்வதா, மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதா என்றால் இதுதான் முக்கியம்!” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு