• Tue. Mar 18th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக அரசின் பட்ஜெட்டை தேமுதிக பாராட்டியது ஏன்? – பிரேமலதா விளக்கம் | Why did DMDK praise the TN govt budget? – Premalatha explains

Byadmin

Mar 17, 2025


மதுரை: “தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது தெரிவிப்போம். எங்களது தேர்தல் அறிக்கை திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதால் வரவேற்பு தெரிவித்தோம்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 17) விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த 2006-ல் தேமுதிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களே தமிழக அரசின் பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளனர். இதை நாங்கள் வரவேற்கிறோம்.பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தியுள்ளனர். இதுவும் நாங்கள் கொண்டு வந்த திட்டமே.

விவசாயிகளுக்கான திட்டங்களும், அவர்களின் வாழ்வாதார திட்டங்களையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படுத்த இருந்தார்.அதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். அதுபோல தமிழ் மொழியை தமிழகம் முழுவதும் கட்டாயமாக்க வேண்டும். அன்னை மொழி காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம் என்பதே தேமுதிக நிலைப்பாடு. தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் தமிழக அரசுடன் இணைந்து போராடுவோம்.

தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்கென போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை காவல் துறையினர் கைது செய்வது தொடர்கிறது. ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்யப்படுவது வழக்கமாக நடப்பதுதான். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளியே கொண்டு வரவேண்டும்” என்றார்.

அப்போது, தமிழக பட்ஜெட்டை தேமுதிக பாராட்டி இருப்பது 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்கான முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, “தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது தெரிவிப்போம். எங்களது தேர்தல் அறிக்கை திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் சொல்லி இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தோம்” என்றார்.



By admin