பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. இதில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் தொடர்பான அறிவிப்புகள் முக்கிய இடம்பெறுகின்றன. உதவித்தொகை, பிணையில்லா கடன், வேலைவாய்ப்பு தொடர்புடைய பல்வேறு அறிவிப்புகள் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
திமுக தங்களின் அறிவிப்புகளையே நகலெடுத்து மீண்டும் அறிவிப்பதாக அதிமுக விமர்சிக்கிறது. ஆனால் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களையே அதிமுக மீண்டும் அறிவிப்பதாக திமுக கூறுகிறது.
நேரடி பணப் பரிமாற்றம் பற்றிய வாக்குறுதிகள் பரவலாக உள்ள நிலையில் அவை விவாதப் பொருளாகின்றன.
“நேரடி ‘பணப் பரிமாற்றம் என்பது தேசிய போக்காக உள்ளது. அது தேர்தல்களில் சாதகமாகவும் இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தயக்கமின்றி திட்டங்களை அறிவிக்கின்றன,” எனக் குறிப்பிடுகிறார் அரசியல் விமர்சகரும், அரசியல் அறிவியல் பேராசிரியரான ராமு மணிவண்ணன்.
நலத் திட்டங்கள் வழங்குவதில் தற்போது போட்டி நிலவுவதாகக் கூறும் பொருளாதார நிபுணர் சண்முகம், நேரடி பணப் பரிமாற்றங்கள் இன்று தேர்தல் அரசியலின் மைய நீரோட்டம் ஆகிவிட்டதாகக் கூறுகிறார்.
இளைஞர்களுக்கான அறிவிப்புகள்
திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இளைஞர் நலன் என்கிற தலைப்பின் கீழ் அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ‘இளைஞருக்கான உத்தரவாதம்’ என்றே தனியாக அறிவிப்புகளை வெளியிட்டார்.
தேசிய அளவில் ‘இலவசங்களுக்கு (Freebies)’ எதிரான விவாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் சமயங்களில் ‘இலவசத் திட்டங்கள்’ மற்றும் நிதியுதவி சார்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் ‘இலவச அறிவிப்புகளுக்கு’ எதிராக வழக்கும் உள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதோடு மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் மகளிர் நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இலவசத் திட்டங்களை நீதிமன்றத்தில் எதிர்க்கும் மத்திய அரசு, அதனை தாங்கள் ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றுவது ‘இரட்டை நிலைப்பாடு’ என்கிறார் ராமு மணிவண்ணன்.
ஆனால் பாஜக இலவசங்களுக்கு எதிரானது என்கிற கருத்தை பாஜகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மறுக்கிறார்.
வாக்குறுதிகளில் இலவசத் திட்டங்கள்
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பேருந்து பயணச் சீட்டு, மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் வீடுதோறும் தொலைக்காட்சி, மேஜை விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விலையில்லா கால்நடைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மின் நுகர்வோருக்கு 100 யூனிட் வரை கட்டணம் இல்லா மின்சாரம் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது.
2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
திமுக ஆட்சிக் காலத்தில் திருமண உதவிக்காக வழங்கப்பட்டு வந்த ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் நிறுத்தப்பட்டு, கல்லூரி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுக தேர்தல் வாக்குறுதியில், “தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
இதனுடன் அனைத்து வீடுகளுக்கும் குளிர்சாதன பெட்டி (ஃப்ரிட்ஜ்) வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. (2021-இல் வீடுதோறும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது)
மறுபுறம் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு அல்லது பழுது பார்ப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும் என திமுக அறிவித்திருக்கிறது.
2021 தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி, “வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும்.” என அறிவித்திருந்தது.
“ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதனால் பெண்கள் வாக்கு வங்கி என்பதன் முக்கியத்துவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர ஆரம்பித்துவிட்டன. அதனால் தான் பெண்களை மையப்படுத்தி நலத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன,” என்கிறார் ராமு மணிவண்ணன்.
நேரடி பணப் பரிமாற்ற திட்டங்கள்
பட மூலாதாரம், ANI
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ‘வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ‘இல்லத்தரசி’ என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது’
அதன்படி, “வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், தற்போது வழங்கப்பட்டு வரும், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ‘குலவிளக்கு’ என்கிற திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஒவ்வொரு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. (2021-ஆம் ஆண்டு குலவிளக்குத் திட்டத்தின் கீழ் ரூ.1,500 வழங்கப்படும் என அதிமுக அறிவித்திருந்தது)
மகளிரைப் போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (2021 தேர்தலின்போது ‘நகரப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50% கட்டண சலுகை வழங்கப்படும்’ என அதிமுக அறிவித்திருந்தது)
பட மூலாதாரம், X/Edappadi Palanisamy
சுய உதவிக் குழுக்கள்
மகளிர் தனியாகவும் சுய உதவிக் குழுவாகவும் ஒரு லட்சம் சிறு/குறு நிறுவனங்கள் தொடங்க ரூ.10,000 வரை மானிய உதவி வழங்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களுக்கு, “5 லட்சம் ரூபாய் வரை முதலீட்டுடன் தொழில் தொடங்க, மானியத்துடன் வங்கிக் கடனுதவி, பிணை எதுவுமின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மகளிர் தன்னுதவிக் குழுக்கள் பெற்றிருக்கின்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்,” என நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை, தொழில் தொடங்க உதவி
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு எவ்விதப் பிணையும் இல்லாமல் ரூ.25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவோ “புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள்; ரூ. 18 இலட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ” என்று வாக்குறுதி அளித்துள்ளது.
இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்ற ரூ.25 லட்சம் வரை பிணையில்லா தொழில்கடன் பெற அரசாங்க உத்தரவாதம் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி, படைப்பாளி தொழில்முனைவோர் திட்டம் மூலம் 1.5 லட்சம் படைப்பாளிகளுக்கு தொடக்க மூலதனம் வழங்கப்படும், 500 படைப்பாளி பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் தவெக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
தமிழருக்கே வேலை
தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75% வேலை வாய்ப்புகள் தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்படும் என அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதியில், “75% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி மற்றும் மின் கட்டணத்தில் மானியம் வழங்கப்படும். அரசு கொள்முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில், “தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவைபோக, அரசு வேலையில் காலியிடங்களை நிரப்புவது, வேலைவாய்ப்பின்மை நிதியுதவி தொடர்பான அறிவிப்புகளும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
“நலத் திட்டங்கள் – கவர்ச்சிகர திட்டங்கள்”
தேர்தல் கால அறிவிப்புகள் எல்லாம் சந்தர்ப்பவாத நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
“முன்னர் நலத் திட்டங்களுக்கும், கவர்ச்சிகர திட்டங்களுக்கும் இடைவெளி இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மறைந்துவிட்டது. எந்த திட்டம் பரந்துபட்ட நோக்கம் கொண்டது, எது குறுகிய கால ஆதாயம் கொண்டது என்பதைப் பொருத்துப் பார்க்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
அதற்குச் சில உதாரணங்களையும் அவர் முன்வைக்கிறார். இதனை மேலும் விவரித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ரேசன் அட்டைதாரர்களுக்கு கட்டணமில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இவை நெசவாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் அவர்கள் பலனடைகிறார்கள்.”
“பொதுப் போக்குவரத்தை ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் கட்டணமில்லாமல் வழங்குவதைப் பற்றி அரசியல் கட்சிகள் பேசுகின்றன. ஆனால் எந்தக் கட்சியும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல பொதுப் போக்குவரத்தை மொத்தமாக இலவசமாக்குவது அல்லது குறைவான கட்டணம் உடையதாக (Affordable) மாற்றுவதைப் பற்றி பேசுவதில்லை. இத்தகைய திட்டங்கள் நீண்ட கால நலன்கள் கொண்டது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு சார்ந்தும் பல கூடுதல் நன்மைகளைக் கொண்டிருக்கும்,” என்றார்.
ஆனால் நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்களின் தாக்கம், அதனால் ஏற்பட்ட பலன்கள் பற்றிய முழுமையான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
போட்டி அரசியலால் ஏற்படும் தாக்கம்

“இவ்வாறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணப் பரிமாற்ற திட்டங்களைச் செயல்படுத்தினால் ஒரு கட்டத்தில் மாநிலத்தின் நிதிநிலையில் அது தாக்கம் செலுத்தும்.” என்றார் ராமு மணிவண்ணன்.
நேரடி பணப் பரிமாற்ற திட்டங்களால் தேர்தல் ஆதாயங்கள் உள்ளன என்றாலும் அது மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது எனக் கூறும் அவர், “அப்படி நடந்தால் கூடுதலான நிதியுதவி திட்டங்களை அறிவிக்கும் கட்சி அல்லது கூட்டணி எளிதாக வென்றுவிடலாம். இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்கள் ஒரு 10% வரை தாக்கம் செலுத்தலாம். வெறும் அறிவிப்பை வைத்து மட்டும் மக்கள் வாக்களிப்பதில்லை. வெற்றி வாய்ப்பையும் பொருத்து தான் மக்கள் வாக்களிக்கின்றனர்.” என்றும் தெரிவித்தார்.
நேரடி பணப் பரிமாற்ற திட்டங்களை அமல்படுத்துவதிலும் கடன் பெறுவதிலும் சட்டப்பூர்வ தடை இல்லை என்கிறார் பொருளாதார நிபுணர் சண்முகம்.
“தேர்தல் ஆதாயங்கள் தான் இதில் முதன்மையானதாக இருந்தாலும் அதில் பலன்கள் இல்லாமல் இல்லை. நலத் திட்டங்கள் என்பது இந்தியாவில் அவசியமான ஒன்று. நேரடியாக பணமாக வழங்குவதா அல்லது பொருளாக வழங்குவதா என்பதில் தான் மாற்றுக் கருத்து உள்ளது.”
“இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மாநில அரசு கடன் பெறுவதற்கும் சட்டப்பூர்வ தடைகள் இல்லை. ஆனால் கடன் தொடர்பான உச்சவரம்புகளை சில சமயங்களில் மத்திய அரசே மீற வேண்டிய சூழல் எழுகிறபோது மாநில அரசுகள் அதைச் சுட்டிக்காட்டி கடன் பெறுகின்றன, மத்திய அரசால் எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியவில்லை,” என்றார்.
“நெருக்கடி ஏற்படும் இரண்டு சூழ்நிலைகள்”
இத்தகைய பணப் பரிமாற்ற திட்டங்களுக்கு நீண்ட கால வளர்ச்சி நோக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன். ஆனால் அதற்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்தால் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
“அரசாங்கம் தான் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் அவர்களால் மட்டும் திறம்பட வேலைவாய்ப்பை உருவாக்கிவிட முடிவதில்லை. அந்த இடைவெளியை நிரப்ப தான் பணப் பரிமாற்றத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதனை ஒரு திட்டமாக மட்டும் பார்க்காமல் பல்வேறு அரசு நலத் திட்டங்களுடன் இணைத்துத் தான் பார்க்க வேண்டும்.”
தமிழ்நாட்டின் கடன் நிலை பற்றி விவரித்த அவர் இரண்டு சூழ்நிலைகளில் சிக்கல் எழலாம் என்றும் குறிப்பிடுகிறார். “தற்போதைய கடன் நிலை என்பது நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் தான் இருக்கிறது. இதே வளர்ச்சி விகிதம் நீடிக்க வேண்டும். அது குறைந்தால் நிதி நிலைமை சிக்கலாகும். அதே போல புதிய நேரடி பணப் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகமானாலும் சிக்கல்கள் எழலாம்.” எனத் தெரிவித்தார்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
அரசியல் கட்சிகள் வாதப் பிரதிவாதங்கள்
திமுகவின் செய்தித் தொடர்பாளரும் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினருமான டிகேஎஸ் இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் நேரடி பணப் பரிமாற்றம் அல்ல. வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் தங்களின் வீட்டு உபயோகப் பொருட்களைப் பழுது பார்க்கவும் அல்லது மாற்றிக் கொள்ளவும் மட்டுமே இந்த தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.
இந்த அறிவிப்பை அதிமுக விமர்சித்திருந்தது. அதற்குப் பதிலளித்து பேசிய டிகேஎஸ் இளங்கோவன், “முதலில் 1,000 ரூபாய் நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றவர்கள் அதையே 2,000 ரூபாயாக ஆக்கப்போவதாக தெரிவிக்கிறார்கள். மாநில அரசின் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறது.”
“மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் இருப்பதால் தான் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களையும் அவ்வாறே நிறைவேற்றுவோம்,” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை நாராயணன் திருப்பதி நிராகரிக்கிறார்.
“பாஜக ‘இலவசங்களுக்கு’ எதிராக உள்ளது என்கிற கருத்தில் உண்மை இல்லை. திமுக அறிவித்துள்ள கூப்பன் திட்டத்தில் தெளிவு இல்லை. இதில் முறைகேடு நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன என்பதைத் தான் சுட்டிக் காட்டினோம். நேரடியாக பணப் பரிமாற்றம் செய்வதில் தவறில்லை.” என்றார்.

இலவசங்களைப் பொதுமைப்படுத்தக் கூடாது எனக் கூறும் அவர், “ஒவ்வொரு மாநில சூழலும் வேறு வேறானது. தமிழ்நாடு அதிக கடன் சுமையில் இருக்கிறது. வளர்ச்சியோடு மக்களின் நுகர்வையும் ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது. அதற்குத் தான் வங்கிகளில் பணம் செலுத்தப்படுகிறது.” என்றும் தெரிவித்தார்.
திமுகவின் திட்டத்தை அதிமுக நகலெடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சசி ரேகா மறுக்கிறார்.
“அதிமுக இந்தத் திட்டங்களை எப்போதும் எதிர்க்கவில்லை. போன தேர்தலிலே அனைத்து மகளிருக்கு ரூ.1,500 வழங்குவோம் என அறிவித்திருந்தோம். திமுக தற்போது தான் 2,000 ரூபாய் என உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது. அதுவும் அனைத்துப் பெண்களுக்கும் வழங்கவில்லை. அதிமுகவின் பல அறிவிப்புகளைத் தான் திமுக குறிப்பிட்டிருக்கிறது. மாநிலத்தின் கடனும் அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார்.
“மாற்றுத் திட்டம் இல்லை”
நேரடிப் பணப் பரிமாற்றம் என்பது மிகச் சிறந்த திட்டம் இல்லையென்றாலும் தற்போதைக்கு அரசாங்கத்தின் முன் உள்ள உடனடி தீர்வாக அது மட்டுமே உள்ளது என்கிறார் கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன்.
பணப் பரிமாற்றம் போன்ற இலவசத் திட்டங்களை ஆதரித்து பேசிய அதிமுகவின் சசிரேகா, “இன்னும் பல்வேறு விஷயங்களில் நாம் தன்னிறைவை அடையவில்லை. அதனால் பணப் பரிமாற்ற திட்டங்கள் தேவைப்படுகிறது. மத்திய அரசின் உதவியுடன் கடனை அதிகரிக்காமல் அதிமுக அதனை நிறைவேற்றும்.” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு