புதுக்கோட்டை: தமிழகத்தில் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதன் மூலம் மகளிருக்கு உழைக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரித்தார்.
புதுக்கோட்டையில் இன்று (பிப்.9) இரவு நடைபெற்ற மேயர் திலகவதி செந்திலின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திடப்பட்ட திட்டமான பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டத்தில், இதுவரை 620 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் 1.15 கோடி பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதன் மூலம் மகளிருக்கு உழைக்கும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது. மேலும், விடுபட்டுள்ள தகுதியான மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்படும்.
காலை உணவுத் திட்டத்தில் தினமும் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதோடு, தமிழ்நாடு என்ற வார்த்தையை எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. பாஜகவினருடன் சேர்ந்து செயல்பட்டு வரும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற கட்சியினர் அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்” இவ்வாறு உதயநிதி பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி புதுக்கோட்டை நகரில் வழியெங்கும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பின்னர், துணை முதல்வர் உத்தரவு எனக் கூறி நேற்று மாலையே அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.