சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,665 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2,837 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்,சிறைத்துறையில் 180 காலி பணியிடங்கள், தீயணைப்பு துறையில் 631 பணியிடங்கள் உள்பட மொத்தம் 3,665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆக.21-ல் வெளியிட்டது.
இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 10-ம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமின்றி பொறியாளர்கள், பட்டதாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட சுமார் 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில், தகுயுடைய 2 லட்சத்து 24,711 லட்சம் பேருக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 45 தேர்வு மையங்களில் நேற்று காலை தேர்வு நடைபெற்றது. இதை 1 லட்சத்து 96,161 பேர் எழுதினர். 28,550 பேர் பங்கேற்கவில்லை. முன்னதாக தேர்வர்கள் காலை 6 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர். காலை 8 மணி முதல் தீவிர சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன்கள், ஸ்மார்ட்வாட்ச், கால்குலேட்டர் உள்பட எலெட்ரானிக் உபகரனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு வளாகம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. சென்னையில் அண்ணாபல்கலை. வளாகம், தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்பட 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில், 1,772 பெண்கள் உட்பட 8,090 பேர் எழுதினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்ஆணையர் அருண் மேற் கொண்டிருந்தார்.
அமைதியான முறையில் தேர்வு நடைபெற்று முடிந்தது.தேர்வு எளிதாக இருந்தாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக உடல்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.