• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் தேமுதிக இணைவு – அரசியல் களத்தில் புதிய திருப்பம்!

Byadmin

Feb 20, 2026


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களத்தில் கூட்டணி அமைத்தல் மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், யாருடன் கூட்டணி அமைப்பது என்ற விவகாரத்தில் இதுவரை மௌனம் காத்து வந்த தேமுதிக, இன்று தனது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போது வெளியானது.

இந்தச் சந்திப்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

2011ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக, 29 எம்.எல்.ஏக்களை வெற்றி பெறச் செய்து அரசியல் களத்தில் வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. ஆனால், அதன்பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் ஒரு பகுதியாக களமிறங்கி தோல்வியை சந்தித்தது. 2021 தேர்தலிலும் அக்கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற முடியாமல் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான சட்டப்பேரவைத் தேர்தலாக வரவிருக்கும் தேர்தல் அமையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

By admin