தமிழக சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த புரூஸ் ஹென்றி என்பவர் தனது உறவினர்களுடன் தொலை பேசியில் பேச தனக்கு அனுமதியளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக வெளி நாடுகளைச் சேர்ந்த கைதிகள் வெளி நாடுகளுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்குள்ளேயும் யாரிடமும் தொலைபேசி மூலமாக பேச முடியாத சூழல் உள்ளது என்றார்.
அதற்கு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், வெளி நாட்டு கைதிகளின் உறவினர்கள் தங்களது தகவல்களை சிறையில் உள்ள கைதிகளுக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் – ஆப் எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு உறவினர்கள் அனுப்பும் தகவல்கள் சிறை அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், இதுதொடர்பாக மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்திய சிறைகளில் உள்ள வெளி நாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசி மூலமாக வசதி ஏற்படுத்து வது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 16-க்கு தள்ளிவைத்துள்ளனர்.