மதுரை: தமிழக அரசு சட்டப்பேரவையில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கோடு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் சமூக நீதிக்கு எதிரானது என அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இந்த பட்ஜெட்டுக்கு பெண்களிடம் வரவேற்பும் நிலவுகிறது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன்: மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, மதுரையை பண்பாடு, தொழில் வளர்ச்சி, அடிக்கட்டமைப்பு மேம்பாடு, அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் நலன் என்கிற ஐந்து மைய அச்சுகளையும் இணைத்து சிந்தித்த 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வைகை நதிக்கரை மேம்பாடு, மாநகராட்சி சாலைகள் மேம்பாடு, தொழில் வளர்ச்சி மூலான வேலைவாய்ப்புகள், அகர மொழிகளின் அருங்காட்சியகம், பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என மதுரைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்தகைய தனித்துவமான, அவசியமான மதுரைக்கான 17 திட்டங்களை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன்: நகர்ப்புறத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்தாண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ.3752 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது கடந்தாண்டை விட ரூ.2725 கோடி கூடுதலாக ஒதுக்கி இருந்தாலும், கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1000 கோடி குறைவுதான்.
மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அறிவிப்பானது, 2026 தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களின் வாக்குகளை பெறும் வகையில் 1.4.2026 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறாதது அரசு ஊழியர்களிடையே ஏமாற்றமளிக்கிறது. இருந்தாலும் நடப்பு கூட்டத் தொடரிலேயே 110-விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கிறோம்.
வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேலு: வரவேற்பிற்குரிய பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், போதுமான தொழில், பொருளாதார வளர்ச்சியில்லாத தென் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கிறது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென்மாவட்டங்களை தொழில் மயமாக்குவதை தீவிரப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என மாநில பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியும், மிகவும் எதிர்பார்த்த பல்வேறு திட்டங்களும், முயற்சிகளும் பட்ஜெட்டில் இல்லாதது மிகவும் ஏமாற்றம். தென் தமிழகத்தின் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க மதுரை விமான நிலையத்திற்கு பல வெளிநாடுகளிலிருந்து நேரடி விமான சேவைகள் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்: எல்லார்க்கும் எல்லாம் என்ற சமநிலை நோக்கத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது. தொழில் துறைக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக பல திட்டங்கள் அறிவித்ததற்கு பாராட்டுகள். அதே நேரத்தில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ரூ. 11,368 கோடி திட்ட மதிப்பீட்டில் மாநில அரசின் பங்கான 20% ஒதுக்கீடு இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படாததும், சென்னையைச் சுற்றியே குளோபல் சிட்டி போன்ற விரிவாக்கம் செய்வதை விடுத்து தென் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிப்பு செய்யப்படாததும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
மடீட்சியா தலைவர் ஏ.கோடீஸ்வரன்: இந்தியாவின் தொழில் வளர்ச்சி 4.5% இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் 8% வளர்ச்சி அடைந்துள்ளதையும், நடப்பு ஆண்டில் 10 லட்சம் சிறு குறுந் தொழில்களுக்கு 2.5 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்க உறுதி செய்துள்ளதை வரவேற்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி அடைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தாலும் சென்னை, கோவையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தனிநபர் வருமானத்தின் பெரிய வித்தியாசத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை – தூத்துக்குடி தொழில் வழித்தடம் அறிவிப்பும், நிதியும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்த தமிழ்நாடு கிரெடிட் கேரண்டி திட்டம் அமல்படுத்த எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன்: தமிழக அரசின் பொது பட்ஜெட்டில் பாராட்ட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது. சென்னை அருகில் கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.350 கோடியில் 14 டிஎம்சி கொள்ளளவுடைய புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எங்களது கூட்டமைப்பு சார்பில் புதிதாக நீர்ப்பாசன திட்டங்களை வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இ.பினேகாஸ்: நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தியதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் குறையும். ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கல், கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுக்காக நிதி ஒதுக்கியது தமிழ் மொழியின் தொன்மையை பாதுகாக்க முடியும். மதுரையில் முதல்வர் படைப்பகம் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி கா.கண்ணகி காளிதாஸ்: பட்ஜெட்டில் ஏராளமான மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் வந்துள்ளது. மகளிர் விடியல் பயணத்தால் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் சதவீதம் 60% வரை உயர்ந்துள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கது. மதுரையில் காலணி தொழில் பூங்கா அமைவதால் ஏராளமான மகளிர், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நீதிராஜா: தமிழக அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை தனிநபர் வருமானம், அகில இந்திய சராசரியில் தமிழகப் பொருளாதாரம் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி 2025 நிதிநிலை அறிக்கை தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு, மொழி, கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.
தமிழகம் கல்வியில் தலைநிமிர உழைத்தவர்கள் ஆசிரியர். பல துறைகளில் தலைநிமிர உழைத்தவர்கள் அரசு ஊழியர்கள். கடந்த கால அரசு செய்த துரோகங்களை, திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் ஆகிய வாக்குறுதிகளை வழங்கி விட்டு 4 ஆண்டுகளாக எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் பலமுறை பேச்சுவார்த்தை என அழைத்து பேசுவது, பிறகு ஏமாற்றுவது, நயவஞ்சகமாக துரோகம் இழைப்பது தொடர்கதையாக உள்ளது. எங்களது வாழ்வாதார கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு சமூக நீதி காக்க முன் வர வேண்டும்.
உசிலம்பட்டி ராமன்: பட்ஜெட்டில் குழும வீடுகள் சீரமைக்க 25 ஆயிரம் வீடுகள் அறிவித்துள்ள தமிழகத்தில் 2329 கிராம ஊராட்சிகள் உள்ளன.இதில் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்பது யானைப்பசிக்கு சோளப்பொறி கதைதான். தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்ந்துள்ளது. இதில் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்காமல் பதிவு செய்யும் பெண்களுக்கு 1% கட்டணம் தளர்த்தப்படும் என்பதும் ஏமாற்று வேலை. எனவே முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும். பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
செல்லூர் க.சரஸ்வதி: பட்ஜெட்டில் மகளிர் நலன் தொடர்புடைய ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெறாத பெண்களுக்கு உரிமைத்தொகை நீட்டித்தது வரவேற்கத்தக்கது. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும். பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கி தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றார்.