• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

‘தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை திட்டம்’ – மத்திய அரசு மீட்க ராமதாஸ் கோரிக்கை | Ramadoss talks on Rescue of TN Fishermen Boats 

Byadmin

May 4, 2025


சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்ற நிலையில் மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு செயல்படுத்தவுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை சார்பில் அந்நாட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையில், இலங்கை கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்குடன் ஆழ்கடலில் செயற்கையான பவளப்பாறைகளை வளர்க்கலாம்; இதற்காக முதற்கட்டமாக 34 படகுகளை உடைத்து மூழ்கடிப்பதன் மூலம் பவளப்பாறைகளை எளிதாக வளர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசின் முதன்மை நோக்கம் பவளப்பாறைகளை வளர்த்து மீன்வளத்தைப் பெருக்குவது என்பதை விட, தமிழக மீனவர்களின் படகுகளை சிதைத்து, அவற்றை அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக ஒழிப்பது தான். இலங்கை அரசின் இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றால் தமிழக மீனவர்கள் வாழ வழியின்றி வாட நேரிடும்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிங்கள அரசு, அதன் அடுத்தக்கட்டமாகத் தான் படகுகளை சிதைத்து மூழ்கடிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது.

2021-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான நான்காண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 174 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 34 படகுகளை அழிக்கத் திட்டமிட்டுள்ள இலங்கை அரசு, அடுத்தடுத்தக் கட்டங்களில் மீதமுள்ள படகுகளையும் அழிக்க முனையும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.



By admin