• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | 17 Rameswaram fishermen arrest: CM Stalin letter to Central Govt

Byadmin

Dec 24, 2024


சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரியும், அடையாளம் தெரியாத இலங்கை நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (டிச.24) எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (டிச.24) சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிச.20-ம் தேதியன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த GPS கருவிகள், VHF கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாக கவலையளிக்கிறது. 2024-ம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.



By admin